ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் திருத்தங்கள் ஏதும் இன்றி மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதாக்கள் நீண்ட காலமாக நிலுவையிலிருந்து வந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார்.
இந்த சூழலில், தமிழ்நாட சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைச் சட்டப்பேரவைத் தலைவர் கூட்டியுள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. வருகிற நவம்பர் 18ம் தேதி இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சபாநாயகர் அப்பாவுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய அந்த 10 மசோதாக்களும் எந்த திருத்தமும் செய்யாமல் மீண்டும் அதே மசோதாக்களைச் சிறப்புச் சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.
சட்டமன்ற கூட்டத் தொடரில் நீதிமன்றம் பற்றியோ, ஆளுநர் பற்றியோ எல்லாம் விவாதிக்க முடியாது. மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதை மீண்டும் அனுப்ப வேண்டும் என்று அரசு விரும்பும் காரணத்தால் அவசர சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
மசோதா திருப்பி அனுப்பப்பட்டால், அரசு அதை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அதற்கு அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை தடை செய்து கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். மீண்டும் சட்டமன்றத்தில் அதை நிறைவேற்றி அனுப்பினோம். அதன் பிறகு ஒப்புதல் அளித்தார். அதே போல நீட். இரண்டாவது முறை வந்த பிறகு தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்" என்றார்.