Breaking News :

Sunday, April 28
.

விஜயராஜ் என்ற நடிகர் விஜயகாந்த்


சிவப்பு தோல்தான் அழகு என்று தீர்மானிக்கப்பட்ட தமிழ் சினிமாவில் கன்னங்கரேல் தோற்றதுடன் நட்சத்திர கனவோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த போது அவருக்கிருந்த தன்னம்பிக்கையை நினைத்துப் பார்த்தால் வியப்பாகவே இருக்கும்.

‘இவனெல்லாம் நடிக்க வந்துட்டான்’ என்று எத்தனையோ பேர் அவமானப்படுத்தி கிண்டல் செய்தாலும் அதை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாமல் திரையில் தன்னை மட்டும் நம்பி முன்னேறியவர்களில் முதன்மையானவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதற்கப்புறம் விஜயகாந்த்தான்.

கறுப்பான ரஜினிக்காவது நகரத்து வாடை, வாட்டசாட்டமான உடல்வாகு போன்ற அம்சங்கள் இருந்தன. ஆனால் விஜயராஜ் என்ற விஜயகாந்த்திற்கோ, தன்னம்பிக்கை ஒன்றைத்தவிர எல்லாமே பின்னடைவுகள்தான். 1979-ல் ‘இனிக்கும் இளமை’ படத்தில் பெண்ணை அலங்கோலமாய் படமெடுத்து பிளாக்மெயில் செய்யும் சோட்டா வில்லனாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாகமாறி, 80களில் அவர் தொடர்ந்து வெற்றிக்கொடியை நாட்டியபோது வியக்காத ஆட்களே கிடையாது.

பெரிதும் பிரபலம் ஆகாத ‘தூரத்து இடிமுழக்கம்’ படத்தில், ‘உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’என்ற பாடல் விவிதபாரதியில் ஒலிப்பரப்பான போது தெறி ஹிட்.. ரெக்கார்ட் பிளேயர்களிலும் தூள் கிளப்பும். ஆனால் படத்தில் கன்னங்கரேல் விஜயகாந்த் அந்தப் பாடலுக்கு தோன்றியபோது ஒரு தரப்பு வியந்தது; இன்னொரு தரப்போ பெர்சனாலிட்டியை வைத்து கிண்டலடித்தது. ஆனால் விஜயகாந்த் என்ற கறுப்பு மனிதன் எதற்கும் கலங்கவில்லை. காலம் அந்த வெள்ளை உள்ளம் கொண்ட கறுப்பனை கைவிடவில்லை.

‘சட்டம் ஒரு இருட்டறை’என 1981ல் ஒரு படம் வந்தது. பெற்றோரை பக்கா பிளானோடு கொலை செய்தவர்களை, பதிலுக்கு பக்கா பிளான்களை தீட்டி வில்லன்கள் ஒவ்வொருத்தராய் போட்டுத்தள்ளுகிற விறுவிறுப்பான படம். அட்டகாசமாய் செய்து முடித்தார் விஜயகாந்த். ஹீரோ திரையில் வரும்போதெல்லாம் தியேட்டரில் கிளாப்ஸ் பறக்கிற ரகமான படம் அது.

அடித்தட்டு மக்களை ஆக்சன் காட்சிகள் மூலம் தன் வசப்படுத்திய விஜயகாந்த், கடுமையாக போராடி முன்னணி நடிகர்களுக்கு இணையாக 80-களின் மத்தியில் மாஸ் கமர்சியல் ஹீரோ என்ற அந்தஸ்த்தை பிடித்தவர்.

சாமான்யனாய் நடித்து வெற்றிகரமாய் ஜொலித்தனால்தான் முன்னணி கதாநாயகனாக ஒரே ஆண்டில் 18 படங்களை வெளி வரச்செய்து சாதனை படைக்கும் அளவுக்கு இருந்தது அவரது திரைப்பயண வேகம்.

சினிமா உலகில் மற்ற இரண்டாம் கலைஞர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதில் தனி அக்கறை காட்டியவர். அற்புதமான திறமைகள் இருந்தும் கைகொடுத்து ஆதரிக்க ஆள் இல்லாமல் தத்தளித்த நவீன சிந்தனை கொண்ட இளைஞர்களுக்கு, பெருங்கதவை திறந்துவிட்ட நல்ல மனதுக்காரர்.

அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, வாய்ப்பு வழங்கப்பட்டு பின்னாளில் புகழின் உச்சியை எட்டிய நடிகர், நடிகை, நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் மிகப்பெரியது

மற்றவர்களின் பசியாற்றுவதில் அவருக்கிருந்த தாயுள்ளத்தை 80 களிலேயே அவரை கூர்ந்து கவனித்தவர்களுக்கு நன்கு தெரியும். கல்விக்காக ஏங்கியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் ஆகியோருக்கு உதவுவதற்காக அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பே அவர் நீட்டிய கரங்கள், வியக்கத்தக்கவை.

கம்பீர குரல் வளத்தால் சினிமாவில்
வலம் வந்த அவருக்கு காலம் செய்த கோலம் உடல் நலம் விஷயத்தில் வேறு மாதிரியாக விளையாடிவிட்டது..

விரைவில்.பூரண நலம் பெற்று பழைய பன்னீர்செல்வமாய்.. விஜயகாந்தாய் வரவேண்டும்.. அதுவே அனைவரதும் ஆசை..


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.