தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக இன்று தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணி முதல் 8 மணி வரை வாக்காளர்கள் ஒவ்வொருவராக வந்தபடி இருந்தனர். 8 மணிக்கு பிறகு வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்கள் எண்ணக்கை அதிகரித்தது. எனவே, 8 மணிக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. எனினும், எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் பதிவாகவில்லை.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சராசரியாக 35.34 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. 3 மணி நிலவரப்படி 47.18 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாநகராட்சிகளில் - 39.13%, நகராட்சிகளில் - 53.49%, பேரூராட்சிகளில் - 61.38% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.
5 மணியில் இருந்து 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே 5 மணிக்கு பிறகு வாக்களிக்க வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 5 மணிக்கு முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இந்தத் தேர்தலையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.