டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பைக் ஓட்டி அதிக அளவில் ரசிகர்களை ஈர்த்தவர் யூடியூப் பிரபலம் டி.டி.எஃப்.வாசன். அதிவேக ஆபத்தான பயணங்கள் தொடர்பாக அவர் மீது புகார் வந்துகொண்டே இருந்தது. இந்த பிரபலத்தை வைத்து சினிமா வாய்ப்பும் அவருக்கு வந்தது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பைக் ஓட்டி வரும் போது விபத்தில் சிக்கினார். இதில் அவரது கை எலும்பு உடைந்தது. பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தான் ஒரு அப்பாவி என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போத நீதிபதியே சூடாகிவிட்டார். டி.டி.எஃப்.வாசனின் பைக்கை எரித்துவிடலாம், அவரது யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் என்று கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் நீதிபதி. ஜாமீன் எல்லாம் தர முடியாது என்று மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி (ஆர்.டி.ஓ) டி.டி.எஃப்.வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்துள்ளார். 2033ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வரை டி.டி.எஃப்.வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
டி.டி.எஃப்.வாசன் மீது தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் வழக்குகள் உள்ளன. இது மட்டுமின்றி விலை உயர்ந்த பைக் பயன்படுத்தி விதிமீறலில் ஈடுபட்டதாகவும் வழக்குகள் உள்ளது.