விமான விபத்தை போன்று இரயில் விபத்துகளும் மிகவும் கோரமாக இருக்கக்கூடியவை. சாலை விபத்துகளை போல் அல்லாமல், இரயில் விபத்துகள் நாம் நினைத்து கூட பார்க்கக்கூடாது என எண்ணும் அளவிற்கு ஒரே நேரத்தில் பல உயிர்களை காவு வாங்கக்கூடியவை.
தற்போதைய காலக்கட்டத்தில் இரயில் விபத்துகள் வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டன. ஏனெனில் இரயில்களின் இயக்கத்திற்கு பயன்படுத்தப்படும் தொழிற்நுட்ப அமைப்புகள் அந்த அளவிற்கு தற்சமயம் முன்னேற்றம் கண்டுள்ளன.
இருப்பினும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இரயில் விபத்துகளுக்கு இப்போதும் சில சாத்தியக்கூறுக்கள் இருக்கதான் செய்கின்றன. இதனாலேயே அத்தகைய இரயில் விபத்துகள் நடைபெற்றுவிடவே கூடாது என நாம் அனைவரும் எண்ணுகிறோம்.
பொதுவாக, இரயில் விபத்துகளுக்கு தண்டவாளத்தில் இருந்து இரயில் சக்கரங்கள் தடம் புரள்வது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தண்டவாளத்தில் இருந்து இரயில் சக்கரங்கள் எளிதில் தடம் புரள்வது இல்லை. கீழ்காணும் 4 காரணங்களினால் தான் பெரும்பாலும் இரயில்கள் தடம் புரள்கின்றன.
தண்டவாளம் பிரச்னைகள்:
தண்டவாளங்களில் ஏற்படும் பழுதுகள் தான் இரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரள்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு முந்தைய இரயில் விபத்துகளின் போது எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களும் இதைதான் தெரிவிக்கின்றன.
தண்டவாளங்களில் வெடிப்பு, உடைந்த வெல்டிங்ஸ், தண்டவாளம்-இரயில் தொடர்பில் பிரச்சனை, தண்டவாளங்களின் வடிவம் மாறுதல், வளைவுகளில் ஏற்படும் பழுதுகள், ஜாயிண்ட் பகுதிகளில் ஏற்படும் குறைப்பாடுகள் உள்ளிட்டவை இரயில் தண்டவாளங்கள் சார்ந்த பிரச்சனைகளாக பார்க்கப்படுகின்றன. இதில் குறிப்பாக, தண்டவாளத்தில் ஏற்படும் வெடிப்புகளினாலும், பற்ற வைக்கப்பட்ட வெல்டிங்குகள் உடைவதாலும் தான் பாதிக்கும் மேல் தண்டவாளம் சார்ந்த இரயில் விபத்துகள் நடைபெறுகிறதாம்.
தொழிற்நுட்ப கோளாறுகள்:
ஏற்கனவே கூறியதுதான், மற்ற ஆட்டோமொபைல் வாகனங்களை போன்று இரயில்களில் பயன்படுத்தப்படும் தொழிற்நுட்பங்களும் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. இதனால் தொழிற்நுட்ப கோளாறுகள் வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டன என்றாலும், எப்போதாவது நடக்கும் சில கோளாறுகளை தடுக்க முடிவதில்லை. தண்டவாளங்களில் ஏற்படும் பழுதுகளுக்கு அடுத்து, இரயில் விபத்துகளுக்கு தொழிற்நுட்ப கோளாறுகள் முக்கியமானவைகளாக விளங்குகின்றன. பிரேக் செயலிழப்பு, இரயில் பெட்டிகளை இழுத்து செல்லும் கொக்கி & சக்கரங்களில் ஏற்படும் பழுதுகள் உள்ளிட்டவை இரயில்களில் உண்டாகும் தொழிற்நுட்ப கோளாறுகளாகும்.
மனிதர்களால் ஏற்படும் பிரச்னைகள்:
விமானிகளை போன்று இரயில்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கும் பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்படும். இருப்பினும், சில சமயங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் இயக்குவது, சிக்னல்களை முறையாக அடையாளம் காணாதது, உதவியாளரிடம் இருந்து முறையாக தகவல்களை பெறாதது உள்ளிட்டவையும் இரயில் தடம் புரள்வதற்கு காரணங்களாக அமைகின்றன. சில நேரங்களில் ஒரு ட்ராக்கில் இருந்து மற்றொரு ட்ராக்கிற்கு இரயிலை மாற்றுவதில் என்ஜின் டிரைவர்கள் தடுமாறுகிறார்கள். இவையும் இரயில் தடம் புரள்வதற்கு வழிவகுக்கின்றன. இவை மட்டுமின்றி, என்ஜின் டிரைவர் போதிய உடல் நலத்துடன் இல்லாவிடினும் இரயில் தடம் புரள்வதற்கு வாய்ப்புள்ளது.
சூற்றுச்சூழல் சார்ந்த காரணிகள்:
அதி வேகத்தில் வீசும் காற்று, பாறை கற்கள் சரிதல், பனி மிகுந்த பகுதிகளில் ஏற்படும் பனிசரிவுகள் போன்ற இயற்கை சீற்றங்களும் சில சமயங்களில் இரயிலை தடம் புரள வைக்கின்றன. ஆனால் இத்தகைய நிகழ்வுகளினால் இரயில் ஒன்று தடம் புரள்வது அரிதான ஒன்றே. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே புயல் மற்றும் அதிக பனிப்பொழிவு நேரங்களில் சில இரயில்கள் இயக்கப்படுவதில்லை. இந்த விஷயத்தில் கனமழையையும் சேர்த்து கொள்ளலாம்.
அதாவது, அளவுக்கு அதிகமாக மழை பெய்து தண்டவாளங்கள் முழுவதும் மழை நீரால் மூழ்கடிக்கப் பட்டிருந்தாலும், இரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புள்ளது. நம் இந்தியாவில், பழமையான கட்டமைப்புகளினாலும், போதிய அளவிற்கு பராமரிப்பின்மையாலும் தண்டவாளங்களில் இருந்து இரயில் தடம் புரள்தல் அவ்வப்போது நடக்கக்கூடிய சம்பவமாக உள்ளது. ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து 2020 வரையில் மட்டுமே இந்தியாவில் மொத்தம் 13 ஆயிரத்திற்கும் அதிகமான இரயில் தடம் புரண்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.