Breaking News :

Wednesday, December 04
.

ரெயில் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு எப்படி மாற்றுவது?


முன்பதிவு செய்து, பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டால், பதிவை நீக்கி பாதிப் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கின்றோம்.

ஆனால் அந்த முன்பதிவு டிக்கெட்டில் உங்கள் உறவினர் அல்லது நண்பர் பயணிக்க முடியும். அதற்கான வழிமுறையும் ரெயில்வே துறையால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

எப்படி மாற்றுவது? அதற்கான வழிமுறை என்ன?

பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, டிக்கெட் முன்பதிவு செய்த நபர், அந்த டிக்கெட்டுடன் ஏன் பயணம் செய்யவில்லை என்ற காரணத்தை குறிப்பிட்டு ஆதார் கார்டு நகலுடன் கடிதம் கொடுக்க வேண்டும்.

அந்த டிக்கெட்டில் பயணிப்பவர் தனக்கு எந்த முறையில் சொந்தம் என குறிப்பிட்டு அவர் பயணிக்க அனுமதி அளிப்பதையும் கடிதத்தில் குறிப்பிட்டு டிக்கெட் முன்பதிவு கண்காணிப்பாளரிடம் கொடுக்க வேண்டும்.

அவர் பெயரை மாற்றிக்கொடுப்பார். இதன் மூலம் பயணிக்கலாம். இதேபோல், பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் குழுவாக பயணம் செல்ல முன்பதிவு செய்து, அதில் யாரேனும் தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் 48 மணி நேரத்துக்கு முன் தொடர்புகொண்டு, தங்களது பயண டிக்கெட்டை சக மாணவருக்கு மாற்றித்தரலாம்.

இதற்கு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவன முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் சார்பில் கடிதம் அளிக்க வேண்டும்.

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு குழுவாக செல்ல நினைத்தவர்களில் யாரேனும் சிலர், தங்களது பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால், அந்த பயணக் குழுவின் தலைவர் 48 மணி நேரத்துக்கு முன்னதாக கடிதம் அளித்து, டிக்கெட்டை வேறு நபரின் பெயரில் மாற்றிக்கொள்ள முடியும்.

இவ்வாறு டிக்கெட்டில் பெயரை மாற்றம் செய்ய எந்தக் கட்டணமும் இல்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்து இருந்தாலும் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.

முக்கிய ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் மட்டுமே பெயர் மாற்றக் கோரிக்கை ஏற்கப்படும்.

பெயர் மாற்றக் கடிதத்துடன் உறவினர் என்பதற்கான அடையாள அட்டையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.

நன்றி: தினத்தந்தி

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.