Breaking News :

Sunday, April 20
.

ரயிலை இயக்க 2 பேர் ஏன்?


பொதுவாக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் இரண்டுபேர் பைலட்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்களின் பணி என்ன? இருவருக்கும் என்ன வித்தியாசம்? ஏன் இருவர் தேவைப்படுகிறார்கள்?

நாம் எல்லோரும் நிச்சயமாக ரயில் பயணம் செய்திருப்போம். பொதுவாக வெளியூருக்கு ரயிலில் பயணம் என்பது என்பது தனி அனுபவம் தான். குறைந்த விலையில் நீண்ட தூரப் பயணம் என்பது ரயிலில் மட்டுமே சாத்தியம். சாலை மற்றும் விமான போக்குவரத்து ரயிலைவிடப் பல மடங்கு அதிகமான விலையில் டிக்கெட் இருக்கும். இந்நிலையில் ரயில் போக்குவரத்து கட்டமைப்பு என்பது எளிமையானது அல்ல. அங்கு இருக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும், ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பின்னால் காரணங்கள் ஒளிந்திருக்கும்.

நீங்கள் ரயில் பயணம் செய்யும் போது இந்தியாவில் 2 விதமான பயணங்களைச் செய்திருப்பீர்கள். ஒன்று சென்னை, மும்பை போன்ற நகரங்களில் மட்டும் செயல்படும் எலெக்டரிக் ரயில் மற்றொன்று நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள், எக்ஸ்பிரஸ், சூப்பர்ஃபாஸ்ட் ரயில்கள், இது போக மெட்ரோ ரயில்களும் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ளன. இந்த ரயில்களில் நீங்கள் கவனித்தீர்கள் என்றால் எலெக்ட்ரிக் மற்றும் மெட்ரோ ரயில்களில் நீங்கள் பயணம் செய்யும் ரயிலை ஒரே ஒரு நபர் தான் இயக்கிக் கொண்டிருப்பார். ரயில் கேபின் உள்ளே ஒரு நபர் மட்டுமே இருப்பார். ஆனால் நீண்ட தூரம் பயணம் செய்யும் ரயில்களில் இன்ஜின் உள்ளே இரண்டு நபர்கள் இருப்பார்கள்.

ஏன் இந்த ரயில்களில் மட்டும் இரண்டு நபர்கள் இருக்கிறார்கள்? எலெக்டரிக் மற்றும் மெட்ரோ ரயிலை தனி நபர்கள் இயக்கும் போது இந்த ரயில்களை ஏன் தனி நபர்களால் இயக்கமுடியவில்லை?

இந்திய ரயில்வேயில் தனி லோகோமோட்டிவ் அதாவது இன்ஜின் கொண்ட ரயில்களைக் கட்டாயம் இரண்டு நபர்கள் தான் இயக்க வேண்டும். தனி நபர் இயக்க அனுமதியில்லை. அதில் முதல் நபர் லோகோ பைலட் எனவும் இரண்டாம் நபர் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த இன்ஜின்களை இருவர் இயக்க முக்கியமான காரணம் பாதுகாப்பு மட்டும் தான் நீண்ட தூரப் பயணம் என்பதால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் மற்றவர் உடனடியாக சுதாரித்து ரயிலைப் பத்திரமாகப் பயணிக்க வைப்பது தான் முக்கியமான காரணம். இந்த இருவரில் லோகோ பைலட் அனுபவம் உள்ளவராகவும். மற்றவர் பயிற்சி பெறும் அசிஸ்டெண்ட் லோகோ பைலட்டாகவும் இருப்பார்கள்.

இந்திய ரயில்வே நிர்வாகம் நேரடியாக லோகோ பைலட்டை தேர்வு செய்வதில்லை. ஒருவர் இன்ஜின் ஓட்டுநராகத் தேர்வு செய்யப்பட்டாலும், அவர் முதலில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட்டாக பணி செய்ய வேண்டும். அனுபவத்திற்குப் பின்பே அவர் லோகோ பைலட்டாக பதிவு உயர்வு அளிக்கப்படுவார்.

ரயில் இன்ஜினினில் தற்போது பயன்பாட்டில் எலெக்ட்ரிக் இன்ஜின் மற்றும் டீசல் இன்ஜின் என இரண்டு வகையான இன்ஜின்கள் இருக்கும். இதில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினை பொருத்தவரை லோகோ பைலட் இன்ஜனின் இடது புறம் இருப்பார். அசிஸ்டெண்ட் லோகோ பைலட் இன்ஜினின் வலது புறம் இருப்பார்.

இப்படியாக அசிஸ்டெண்ட் லோகோ பைலட்டாக இருப்பவர்களுக்கு இரண்டு விதமான பணிகள் பிரித்து வழங்கப்படும். முதல் பணி ரயில் கிளம்பும் முன்பு சரி பார்க்கப்பட வேண்டிய விஷயங்களை எல்லாம் சரி பார்க்க வேண்டும். அதற்கான தனி செக் லிஸ்ட் இருக்கிறது. அதைச் சரி பார்த்த பின்பு தான். ரயிலில் ஏற வேண்டும்.

அடுத்ததாக ரயில் பயணிக்கும் போது இவருக்கு முக்கியமான பணி கவனிக்க வேண்டியது. அவர் ரயில் செல்லும் பாதையில் தண்டவாளத்தைச் சரியாகக் கவனிக்க வேண்டும் தூரத்தில் தண்டவாளத்தில் பிரச்சனை இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அடுத்தாக சிக்னல்களை கண்காணித்து லோகோ பைலட்டிற்கு சொல்ல வேண்டும். இதற்கு அடுத்த முக்கியமான வேலை ரயில் ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் எத்தனை மணிக்குக் கடக்கிறது என்பதைக் குறிப்பிட்டு அப்டேட் செய்ய வேண்டும். இது போக ரயிலின் வலதுபக்கம் ஸ்டேஷன் மாஸ்டர் இருக்கும் பகுதி இருந்தால் ரயில் ஸ்டேஷனை கடந்து செல்லும் போது பச்சைக் கொடி காட்ட வேண்டும். இது போக எதிரில் வரும் ரயில்களுடனும் தொடர்பில் இருக்க வேண்டும்.

இது எல்லாம் வழக்கமான பணிகள். இது போல அவசரக் கால பணிகளும் இருக்கிறது. ரயிலில் செயினை யாராவது பயணி இழுத்தால் ரயிலை நிப்பாட்டி விட்டு அசிஸ்டெண்ட் ரயில் டிரைவர்தான் எந்த பயணி இழுத்தார். என்ன பிரச்சனை என்பதைச் சென்று பார்க்க வேண்டும்.

அடுத்தாக ஏதாவது காரணங்களுக்காக ரயிலைத் தொடர்ந்து லோகோ பைலட்டால் இயக்க முடியவில்லை என்றால் இவர் தான் அடுத்த ரயில் நிலையம் வரை ரயிலை இயக்கி செல்ல வேண்டும். என்னதான் இரண்டு பேர் இருந்தாலும் ரயிலின் ஒட்டு மொத்த இயக்கத்திற்கு லோகோ பைலட் மட்டுமே பொறுப்பு

மெட்ரோ மற்றும் உள்ளூர் எலெக்டரிக் ரயில்களில் ஒரே ஒரு லோகோ பைலட் தான் இருப்பார் இதற்கு முக்கியமான காரணம் மிகக் குறைந்த தூரம் மட்டுமே ரயில் இயங்குகிறது. இது மட்டுமல்ல ரயிலின் மறு பக்கத்தில் மற்றொரு பைலட் இருப்பார். இருவரும் தொடர்பில் இருப்பார்கள்.

ஒருவர் ரயிலை ஓட்டும் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக ரயிலின் ஒட்டுமொத்த கண்ட்ரோலை மற்றவர் எடுத்துக்கொள்ளும் வசதியும் இந்த ரயிலில் செய்யப்பட்டுள்ளது. இது போக ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி, போன்ற ரயில்களில் இரண்டு பேருமே லோகோ பைலட்களாக இருப்பார்கள். பயிற்சி பெறுபவர்களுக்கு அதில் அனுமதியில்லை. ஒவர் மெயின் லோகோ பைலட்டாகவும் மற்றவர் கோ பைலட்டாகவும் செயல்படுவார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.