சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டி சொல்வது என்ன!
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பூஜைக்கு வைத்த பொருள் மூலம் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்படும் என்பதை 20 நாட்களுக்கு முன்னரே சிவன் உணர்த்தினாரா என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி முதல் பெட்டியில் மண் விளக்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இந்த கோயில் அருணகிரி நாதரால் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. சிவன்மலை கோயில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டிதான். பக்தர்களின் கனவில் ஆண்டவன் வந்து, இந்த உத்தரவு பெட்டியில் குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய வேண்டும் என சொல்வார்.
அதை அவர்கள் கோயில் பூசாரியிடம் சொல்வார்கள். அந்த பூசாரி, இவர்கள் சொல்வது உண்மையா என உத்தரவு கேட்டு அது உண்மை எனும் பட்சத்தில் அந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்வர். இந்த பொருளை வைத்து பூஜை செய்தால் அதன் மூலம் நாட்டிற்கு ஏற்படும் நல்லது, கெட்டதுகளை உணர்த்தும் என சொல்லப்படுகிறது.
ஒரு முறை மஞ்சள் வைத்து பூஜை செய்ய சொல்லப்படடது. அப்போது மஞ்சள் விலை உயர்ந்து விவசாயிகளுக்கு லாபம் கொழித்தது. அது போல் ரூபாய் நோட்டு வைத்து பூஜை செய்ய சொன்ன போது நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. ஒரு முறை தண்ணீர் வைத்து பூஜை செய்ய உத்தரவு வந்தது.
அதன் பேரில் பூஜை செய்த போது தண்ணீரால் பேரிழப்பு ஏற்பட்டது. இது போல் பக்தர்கள் கனவில் வரும் பொருட்களைவ வைக்கலாமா என்பதை பூசாரிகள் வெள்ளைப்பூ, சிகப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர், அதில் வெள்ளைப் பூ வந்தால் உடனே மாற்றுவார்கள்.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி புடவை வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் சின்னாண்டகோயிலை சேர்ந்த தணிகைநாதனின் (33) கனவில் மண் விளக்கு வைத்து பூஜை செய்ய உத்தரவு வந்தது. அதன்படி கடந்த நவம்பர் 12 ஆம் தேதி முதல் மண் விளக்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இதனால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வு முன்னேறும். அவர்களுடைய தொழில் விருத்தியாகும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் வேறு ஒரு விஷயமும் சொல்லப்படுகிறது. அதாவது அண்மையில் பெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் அதிக மழை பொழிவு இருந்தது.
அப்போது டிசம்பர் 3-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் மண்ணுக்குள் புதைந்து சடலமாக மீட்கப்பட்ட துயர சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் தொடர்ந்து 2 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் வரும் 13 ஆம் தேதி திருவண்ணாமலையில் மலை மீது தீபம் ஏற்றும் வைபவம் எப்படி நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே தீபத்திருநாளில் குறிப்பிட்ட நபர்கள் மலை மீது ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த முறை அந்த நபர்களுக்கும் அனுமதி இல்லாமல் வெறும் கோயில் நிர்வாகத்தினர் மட்டும் தீபம் ஏற்றுவார்கள் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மண் சரிவை கடந்த 20 நாட்களுக்கு முன்னரே சிவன் உணர்த்திவிட்டதாகவும் அதற்கு சாட்சியாகத்தான் மண் விளக்கை சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கச் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்துடன் மண் விளக்கு தொடர்புடையது என்பதால் ஈசன் முன்கூட்டியே உணர்த்தினாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.