இந்துக்களில் இரண்டு வகை உள்ளது. நாங்கள் ஆழமாக மதத்தைப் பின்பற்றும் இந்துக்கள், ஆனால் பாஜக-வே அரசியல் இந்துவாக உள்ளது என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கல்வகுண்டலா கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வரின் மகளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி மூத்த தலைவர்களுள் ஒருவருமான கவிதா கல்வகுண்டலா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி கார்த்தி ஆகியோர் பங்கேற்றனர். இதில் கார்த்தி சிதம்பரம், கவிதா கல்வகுண்டலா பேசியது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தற்போது இந்து மதம் தொடர்பாக கவிதா பேசியது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அரசியலுக்காக இந்து, ஒழுங்காக பின்பற்றும் இந்து என்று இந்து மதத்தில் இரண்டு பிரிவுகள் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். பாஜக என்பது அரசியலுக்காக இந்து. தென்னிந்தியாவின் இதர மக்கள் இந்து மதத்தை ஒழுங்காக பின்பற்றும் இந்துக்களாக இருக்கின்றனர். நாங்கள் தொடர்ந்து கோவில்களுக்கு செல்கிறோம். மிகவும் ஆன்மிகம் உணர்வு உள்ளவர்களாக இருக்கிறோம். குறிப்பாக நான் தொடர்ந்து கோவிலுக்கு செல்கிறேன், அதீத இந்து மத நம்பிக்கை உள்ளவளாக இருக்கிறேன். ஆனால் என்னுடைய மதம் என்னுடைய வீட்டுக்குள் மட்டும்.
நான் அரசியல்வாதியாக இருக்கும் போது, வௌியே சென்று பல தரப்பு மக்களைச் சந்திக்கும் போது நான் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் நலத்திட்டம் செல்ல வேண்டும், வளர்ச்சிப் பணிகள் செல்ல வேண்டும் என்று கருதினால் அது நியாயமாக இருக்காது. அது இந்தியாவாகவும் இருக்காது" என்று கூறினார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் முன்னிலையில் கவிதா இவ்வாறு பேசியது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க முன்னனி தலைவரும் எம்.பி-யுமான ஆ.ராசா, இந்துக்களில் இரண்டு வகை. சனாதன இந்து, சபிக்கப்பட்ட இந்து என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கவிதாவின் இந்த பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.