நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அரசுக்குத் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. இந்த சூழலில் சட்டமன்றத்தின் அவசர கூட்டம் நவம்பர் 18ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும். அப்படி திருப்பி அனுப்பப்படும் மசோதாவை அரசு மீண்டும் ஒப்புதலுக்காக அனுப்பினால் அதில் கையெழுத்திட வேண்டியது ஆளுநரின் கடமை. அது போல தமிழ்நாடு அரசும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பியது.
ஆனால், ஆளுநர் ரவி இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். மேலும், பரிசீலனையில் இருக்கிறது என்று கூறினால் அது நிராகரிக்கப்பட்டது என்று அர்த்தம் என்ற வகையில் அவர் பேசியும் இருந்தார்.
இந்த சூழலில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் இவ்வளவு நாட்களாக பரிசீலனையில் உள்ளது என்று வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பியுள்ளார்.
சென்னை பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழக திருத்த மசோதா, அண்ணா பல்கலைக் கழக சட்ட மசோதா உள்ளிட்ட துணை வேந்தர்களை ஆளுநருக்கு பதிலாக தமிழ்நாடு அரசே நியமிக்க வழி வகை செய்யும் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நாளை மறுநாள் (நவம்பர் 18) நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளுநரால் இரண்டாவது முறை திருப்பி அனுப்ப முடியாது, ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இதனால் என்ன ஆகும் என்ற பரபரப்பு தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்டுள்ளது!