தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலே தான் தேரிக்காடு உள்ளது. இங்குள்ள மணல்கள் சிவப்பு மணல் மேடுகளால் ஆனதாகும். இது 12,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இக்காட்டிற்கு இன்னொரு பெயர் உண்டு அதுதான், குதிரைமொழி தேரி, இங்கிருக்கும் சிவப்பு மணல் மேடுகள் காற்றின் காரணமாக மாறிக்கொண்டேயிருக்கும் தன்மை கொண்டது. இக்காட்டிற்குள் அதிகம் தூரம் சென்றால் தொலைந்து விடுவோம் என்று கூறுகிறார்கள். ஏனெனில் நிலப்பரப்பு அடிக்கடி காற்றினால் மாறிக் கொண்டேயிருப்பதால் வழி மறந்துவிடும் என்று அங்கிருக்கும் மக்கள் கூறுகிறார்கள்.
தேரிக்காட்டில் முந்திரி செடிகளும், பனை மரங்களுமே அதிகமாக காணப்படுகிறது. தேரிக்காட்டில் உள்ளது போன்று சிவப்பு மணல்கள் அந்த பகுதிகளில் வேறு எங்குமே கிடையாது. இங்கு மட்டுமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிகப்பு மணல்கள் அமைந்திருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று. இங்குள்ள மணல் படிமங்கள் 2.6 மில்லியன் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. கடலில் இருந்து வந்து படிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இங்கேயிருக்கும் நிலப்பகுதியை மூன்று அடுக்குகளாக பிரிக்கிறார்கள். அதில் முதல் அடுக்கு 8000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் இரண்டாவது அடுக்கு 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் மேல்பகுதி 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முந்தையதும் என்றும் கூறப்படுகிறது.
இங்கிருக்கும் மணல்களில் இரும்பு ஆக்ஸைட் (Iron oxide) உள்ளதால் இது சிவப்பு நிறத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அருஞ்சுணை காத்த அய்யனார் கோவில் மற்றும் கருகுவேல் அய்யனார் கோவில் இங்குள்ள மிகவும் பிரபலமான அய்யனார் கோவில்களாகும். அருஞ்சுணை காத்த அய்யனார் கோவிலில் இருக்கும் சுணை நீர் மிகவும் சுவையாக இருக்கும். இந்த பாலைவனத்தின் நடுவிலே ஒரு அழகிய நீர்சுணை அமைந்திருப்பது மேலும் அதிசயமாக உள்ளது. அதை விட அதிசயம், அது வற்றாத நீர்சுணை என்று அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.
தேரிக்காட்டில் சூரிய உதயமும், அஸ்தமனமும் காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் என்பதால் நிறைய சுற்றுலாப்பயணிகளை இங்கே ஈர்க்கிறது என்றே சொல்ல வேண்டும்.இத்தனை காலமாக பெரிதும் அறியப்படாத இடமாக இருந்த தேரிக்காடு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
இங்குள்ள சிவப்பு மணல்கள் புகைப்படம் எடுப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதனால், புகைப்படக்கலைஞர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கிறது.எனவே வளர்ந்து வரும் சுற்றுலாத்தலமான தேரிக்காட்டின் அழகை நிச்சயமாக ஒருமுறையாவது ரசித்துவிட்டு வர வேண்டியது மிகவும் அவசியமாகும்.