Breaking News :

Wednesday, July 09
.

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்


மகிமர் சாஸ்திரங்களிலிருந்து பல சுலோகங்களைக் கூறினார். பிறகு தந்திரத்தில் கூறப்பட்டுள்ள பூசரி, கேசரி, சாம்பவி முதலிய பல முத்திரைகளை விளக்கினார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்: 'சமாதி நிலையில் என் ஆன்மா மகா ஆகாசத்தில் ஒரு பறவையைப்போல் பறந்து திரிகிறது என்று சிலர் என்னிடம் கூறினர். ரிஷிகேசத்தைச் சேர்ந்த ஒரு சாது வந்திருந்தார். "எறும்புபோல், மீன்போல், குரங்குபோல், பறவைபோல், பாம்புபோல் என்று சமாதியில் ஐந்து வகை உண்டு. நீங்கள் அவையெல்லாவற்றையும் அனுபவித்திருப்பதை நான் காண்கிறேன் "என்றார் அவர்.
'சிலவேளைகளில் வாயு, எறும்பு ஊர்வதைப்போன்று ஊர்ந்து மேலே கிளம்புகிறது. சிலவேளைகளில் சமாதி நிலையில் ஆன்மாவாகிய மீன் பாவனைக் கடலில் ஆனந்தமாக விளையாடுகிறது.

'சிலவேளைகளில் நான் ஒரு பக்கமாகத் திரும்பிப் படுக்கும்போது மகாவாயு குரங்கு குதிப்பதுபோல் என்னை உந்தும், ஆனந்தமாக விளையாடும். நான் அமைதியாக இருப்பேன். திடீரென்று அந்த வாயு குரங்கைப்போல் தாவி ஒரேயடியாக ஸஹஸ்ராரத்தை அடைந்துவிடும்! அதனால்தான் நான் சிலவேளைகளில் திடுமென துள்ளி எழுகிறேன்!

'இன்னும் சிலவேளைகளில் பறவை இந்தக் கிளையிலிருந்து அந்தக் கிளைக்கும், அந்தக் கிளையிலிருந்து இந்தக் கிளைக்கும் தத்திச் செல்வதைப்போல் மகாவாயு உயரே கிளம்புகிறது. எந்தக் கிளையில் உட்கார்கிறதோ அந்த இடம் நெருப்புப்போல் தோன்றுகிறது. அது மூலாதாரத்திலிருந்து சுவாதிஷ்டானம், அங்கிருந்து இதயம், இப்படி படிப்படியாக உச்சந்தலையை அடையும்.

'சில வேளைகளில் மகாவாயு பாம்பு வளைந்து வளைந்து செல்வதைப் போலவும் செல்வதுண்டு. அவ்வாறு வளைந்துவளைந்து சென்று கடைசியில் உச்சந்தலையை அடையும் பொழுது சமாதி நிலை ஏற்படுகிறது.

'குலகுண்டலினி விழித்தெழாமல் ஆன்மீக விழிப்புணர்வு உண்டாவதில்லை. குலகுண்டலினி மூலாதாரத்தில் இருக்கிறது. விழிப்புணர்வு உண்டாகும்போது அது சுழு முனை நாடி வழியாக சுவாதிஷ்டானம், மணிபூரகம் போன்ற எல்லா சக்கரங்களையும் துளைத்துக்கொண்டு கடைசியில் உச்சந்தலையை அடைகிறது. இதுதான் மகாவாயுவின் இயக்கம் என்பார்கள். கடைசியில் சமாதி ஏற்படுகிறது.

'வெறும் புத்தகப் படிப்பினால் ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படாது, இறைவனை அழைக்க வேண்டும். மன ஏக்கம் ஏற்படுமானால் அப்போது குண்டலினி விழித்தெழும். ஞானத்தைப்பற்றி கேட்பதாலும் புத்தகங்களைப் படிப்பதாலும் என்ன பயன்!

குலகுண்டலினி எவ்வாறு விழித்தெழும் என்பது எனக்கு இந்த நிலை ஏற்படுவதற்குச் சற்று முன்பு காட்டப் பட்டது. ஒன்றன்பின் ஒன்றாக எல்லா தாமரைகளும் மலரத் தொடங்கின, சமாதி நிலை கூடியது. இது மிகவும் ரகசியமான விஷயம். சரியாக என்னைப்போன்ற இருபத்திரண்டு இருபத்து மூன்று வயதுடைய இளைஞன் ஒருவன் சுழுமுனை நாடியுள் சென்று, யோனி வடிவாகிய தாமரைகளுடன் நாக்கினால் கூடி மகிழ்வதைக் கண்டேன். முதலில் குதம், குறி, தொப்புள் இவற்றைத் தொட்டான். கவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்த நான்கு இதழ், ஆறு இதழ், பத்து இதழ்த் தாமரைகள் எல்லாம் அவன் தொட்டதும் நிமிர்ந்து நின்றன!

'இதயத்துக்கு வந்தபோது-நன்றாக நினைவிருக்கிறது-அவன் நாக்கினால் தொட்டு கூடி மகிழ்ந்ததும் அந்தப் பன்னிரண்டு இதழ்த் தாமரை நிமிர்ந்து மலர்ந்தது. பிறகு தொண்டையில் உள்ள பதினாறு இதழ்த் தாமரை, பிறகு நெற்றியிலுள்ள இரண்டு இதழ்த் தாமரை, கடைசியாக ஆயிரம் இதழ்த் தாமரை எல்லாம் மலர்ந்தன. அன்று முதல் நான் இந்த நிலையில் இருக்கிறேன்.'

இதைச் சொல்லியபடியே குருதேவர் கட்டிலிலிருந்து இறங்கித் தரையில் மகிமருக்கு அருகில் அமர்ந்தார். அருகில் ம-வும் இன்னும் சில பக்தர்களும் இருந்தனர். அறையில் ராக்காலும் இருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் (மகிமரிடம்): 'பல நாட்களாகவே உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் முடியவில்லை. இன்று சொல்லலாம் என்று எண்ணுகிறேன். சாதனைகள் செய்தால் எனது நிலைகள் உண்டாகும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அப்படியல்ல. இங்கு (என்னிடம்) சிறிது விசேஷம் இருக்கிறது.'

ம-, ராக்கால் முதலிய பக்தர்கள் குருதேவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க மிகுந்த ஆவலோடு இருந்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ணர்: 'தேவி என்னுடன் பேசினாள். வெறும் காட்சி மட்டுமல்ல, பேசவும் செய்தாள். கங்கையிலிருந்து அவள் எழுந்து வந்ததை ஆல மரத்தடியிலிருந்து நான் கண் டேன். பிறகு நாங்களிருவரும் எவ்வளவோ சிரித்துக் களித்தோம்! விளையாட்டாக அவள் என் விரல்களைச் சொடுக்கினாள். பிறகு பேசினோம். ஆம். என்னோடு எவ்வளவோ பேசினாள்!

புத்தகம் :
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் 3

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.