கப்பலில் பயணம் செய்ய யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். இருப்பினும் நீண்ட தொலைவிற்கு கப்பலில் பயணம் செய்ய போகிறோம் என்றால், சிலர் சற்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஏனெனில் நீண்ட தொலைவிற்கு, கண்டம் விட்டு கண்டம் செல்லும் பயணங்கள் மாதக்கணக்கில் கூட நீளும். அவ்வளவு மாதங்களுக்கு, பல்வேறு குலுக்கல்களுக்கு மத்தியில் பயணிக்க நமது உடல்நிலை தாங்குமா என்கிற கேள்வி மனதுக்குள் எழும்.
அதே தொலைவை விமானத்தில் சில மணிநேரங்களிலோ அல்லது சில நாட்களிலோ கடந்துவிடலாம். இதற்கு காரணம் கப்பலின் குறைந்த வேகமே. இவ்வாறு கப்பல்கள் அதிகப்பட்சமாகவே எந்த வேகத்தில்தான் இயங்குகின்றன? கப்பலின் வேகம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
எல்லா கப்பல்களும் ஒரே மாதிரியான வேகத்தில் பயணிப்பதில்லை. சாலை & வான் வாகனங்களை போன்று நீர்வழி வாகனங்களான கப்பல்களின் வேகமும் அவற்றின் உடலமைப்பு, அவற்றில் பொருத்தப்படும் என்ஜின்கள், அவற்றை இயக்குவோரின் திறன், பயண சூழலில் நிலவும் தட்ப வெப்பநிலை மற்றும் பயணிக்கும் கடல் நீரின் தன்மை என ஏகப்பட்ட காரணிகளை சார்ந்ததாக உள்ளது.
அதேபோல் கப்பல்களும் இயக்கத்தின் போது மாசு உமிழ்வை ஏற்படுத்துகின்றன. ஒரு கப்பல் அதி வேகத்தில் செல்கிறது எனில், அதிக மாசுவை உமிழ்கிறது என சொல்லாம். இதனாலேயே சில சரக்கு கப்பல்கள் குறைந்த கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழும் விதமாக குறைந்த வேகத்தில் இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்படுகின்றன.
அதிவேகத்தில் இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டாலும், அனுபவமிக்க கேப்டன்கள் அதிக எரிபொருள் விலையை கருத்தில் கொண்டு கப்பல்களை மெதுவாக இயக்க முற்படுகின்றனர். ஆனால் பெரும்பாலும் இவ்வாறு மெதுவாக இயங்கும் பெரிய கப்பல்கள் பொருட்களையும், எண்ணெய்களையும் ஏற்றி செல்லும் சரக்கு கப்பல்களாகவே இருக்கும். ஏனெனில் சரக்கு கப்பல்களுக்கு பெரியதாக அவசரம் இருக்காது.
பொதுவாக கப்பல்களின் வேகம் ஆனது க்னாட் (Knot) எனப்படும் அளவீட்டால் மதிப்பிடப்படுகிறது. க்னாட் ஆனது பல வருடங்களாக கப்பலின் வேகத்தை கண்டறிய பயன்படுத்தப்படும் அளவீட்டாகும். முந்தைய காலங்களில், கப்பலின் வேகத்தை அறிய கப்பலில் இருந்து கயிற்றின் ஒரு முனையை கடலில் போடுவார்கள். அந்த கயிற்றில் ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியிலும் ஒரு மார்க் இருக்கும்.
மார்க்கை பயன்படுத்துவதற்கு முந்தைய காலங்களில் கயிற்றில் முடிச்சு போட்டு வைத்தனர். முடிச்சுக்கு ஆங்கிலத்தில் க்னாட் என்பது பொருள். அந்த க்னாட் என்ற வார்த்தை தற்போதுவரையில் பயன்பாட்டில் உள்ளது. அவ்வாறு கயிற்றை கடலில் போட்ட உடன் ஒருவர் 30-வினாடி மணல் கடிகாரத்தை வைத்து நேரத்தை கணக்கிட ஆரம்பிப்பார்.
மற்றொருவர் கப்பலில் இருந்து கடலுக்குள் சென்ற கயிற்றின் மார்க்/முடிச்சுகளின் எண்ணிக்கையை கணக்கிடுவார். குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர், கடந்து சென்ற மார்க்/முடிச்சுகளின் எண்ணிக்கையை ஒவ்வொரு முடிச்சுகளுக்கும் இடையேயான தூரத்துடன் பெருக்கி, நேரத்துடன் வகுத்து கப்பலின் வேகத்தை அறிந்து கொண்டனர்.
கிடைக்க பெற்ற எண்ணுடன் இறுதியில் க்னாட் வார்த்தையை சேர்த்து, கப்பல் இத்தனை க்னாட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என கூறுவர். கடலில் ஒரு கப்பல் 1 க்னாட் வேகத்தில் பயணித்து கொண்டிருக்கிறது என்றால், அது மணிக்கு 1.852கிமீ வேகத்தில் செல்கிறது என்று அர்த்தமாகும். அதாவது 1 க்னாட் = 1.852kmph ஆகும். இவ்வாறு தான் முந்தைய காலங்களில் கப்பலின் வேகத்தை கணக்கிட்டனர். ஆனால் தற்போது தொழிற்நுட்பங்களின் வளர்ச்சியால் எளிமையாக ஜிபிஎஸ் அமைப்பின் உதவியுடன் கப்பலின் வேகத்தை மாலுமிகள் அறிந்து கொள்கின்றனர். முன்பை காட்டிலும் மிகவும் துல்லியமாக கப்பலின் வேகத்தை காட்டும் தற்போதைய ஜிபிஎஸ் அமைப்பில் டிரான்ஸ்மிட்டர், ரிசிவர் மற்றும் சாட்டிலைட் உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன.
இருப்பினும் க்னாட் அளவிலேயே கப்பலின் வேகம் இன்றும் கணக்கிடப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் கண்டெய்னர் பெட்டிகளையும், அதிக எடை கொண்ட பொருட்களையும் ஏற்றி செல்லும் சரக்கு கப்பல்கள் 13 முதல் அதிகப்பட்சமாக 15 க்னாட்கள் வரையிலான வேகத்தில் பயணிக்கின்றன. அதாவது மணிக்கு 24கிமீ வேகத்தில் இருந்து அதிகப்பட்சமாக மணிக்கு 27.78கிமீ வேகம் வரையில் செல்கின்றன.
அதுவே எண்ணெய்களை ஏற்றி செல்லும் பெரும் டேங்கர் கப்பல்கள் 13-17 க்னாட் வேகத்திலும், ஆட்டோமொபைல் வாகனங்களை ஏற்றி செல்லும் ரோ-ரோ கப்பல்கள் 16-22 க்னாட் வேகத்திலும் விஐபி-கள் மற்றும் செல்வந்தர்கள் பயணிக்கும் சொகுசு கப்பல்கள் 20-25 க்னாட் வேகத்திலும் பயணிக்கக் கூடியவைகளாக உள்ளன. அதாவது, சொகுசு கப்பல்களே அதிகப்பட்சமாக 46.3kmph வேகத்தில் தான் இயக்குகின்றன.