ஒவ்வொருவரும் வாரம் 5 கிராம் பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சாப்பிடும் உணவு பொருட்களுடன் புழக்கத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் கலந்து விடுவதாக ஆய்வை மேற்கொண்ட ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
ஆய்வின் முடிவின்படி சராசரியாக ஒருவா் ஒவ்வொரு வாரமும் 2 ஆயிரம் சிறிய பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார், மாதத்திற்கு 21 கிராம் சாப்பிடுகிறார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இது 250 கிராமாக உயா்ந்து விடுகிறது.
பிளாஸ்டிக் பெரும்பாலும் பாட்டில்கள், குழாய்கள் போன்ற நீா் ஆதாரங்கள் வழியாகவே உடலுக்குள் ஊடுருவுவதாகவும் ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா். அதிக அளவில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில்தான் ஆபத்து அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
உதாரணமாக அமெரிக்காவில் 94.4 சதவீத பிளாஸ்டிக் குழாய்களின் நீா் மாதிரிகளில் பிளாஸ்டிக் இழைகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஒரு லிட்டா் தண்ணீருடன் கணக்கிடும்போது அதில் 9.6 சதவீதம் பிளாஸ்டிக் இழைகள் கலந்திருக்கின்றன.
இதுவே ஐரோப்பிய நாடுகளில் ஒரு லிட்டா் நீரில் பிளாஸ்டிக் இழைகளின் அளவு 3.8 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கிறது. இந்த ஆய்வை மேற்கொண்டவா்களில் ஒருவரான மார்கோ லம்பொ்டினி கூறுகையில், இந்த ஆய்வு மக்களை விழித்தெழ வைக்கும் எச்சரிக்கை ஒலியாக அமைந்திருக்கிறது.
கடலையும், நீா் நிலைகளையும் மாசுபடுத்துவதோடு கடல் உயிரினங்களின் அழிவுக்கும் அது காரணமாக இருக்கிறது. நாம் பிளாஸ்டிக் உட்கொள்வதில் இருந்து தப்பிக்க முடியாது.
அதனை தவிர்க்க உலகளாவிய அளவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசரமானது , அவசியமானது.