Breaking News :

Friday, February 14
.

8 வயது சிறுமி கடத்திக் கொலை - கமல்ஹாசன் கேள்வி


புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? 

 

குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. 

 

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம். 

 

#SayNoToDrugs

 

- கமல்ஹாசன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.