சைதை துரைசாமியின் மகன் வெற்றி குறித்து எந்தத் தடயமும் சிக்காத நிலையில் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
வெற்றி குறித்து தகவல் தருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் தருவதாக அறிவிக்கப்பட்டும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதனிடையே விபத்து நடந்த இடத்தில், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஆற்றுக்குள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேடி பார்த்தும் வெற்றி துரைசாமி கிடைக்கவில்லை. அதே பகுதியில் மூளையின் திசு ஒன்று கிடைத்துள்ள நிலையில், அது வெற்றி துரைசாமி உடையதா என்பதை கண்டறிவதற்காக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி சைதை துரைசாமியின் டிஎன்ஏ சேகரிக்கப்பட்டு, இரண்டு டிஎன்ஏ-க்களும் சென்னைக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வெளிவந்தால் மட்டுமே வெற்றியின் விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆற்றிலிருந்து வெற்றியின் ஐபோன், அவருடைய சூட்கேஸ், உடமைகள் அடங்கிய பை ஆகியவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
அதே சமயம் இன்னமும் தேடுதல் வேட்டையைத் தொடரும் இமாச்சல் போலீஸார், தற்போது புதிய உத்தியின் மூலம் தேடுதல் வேட்டையை தொடங்கி இருக்கிறார்கள்.
அதன்படி, வெற்றியின் உடல் எடை கொண்ட பொம்மை ஒன்றை ஆற்றில் வீசி, அது எந்தப் பாதையில் பயணிக்கிறது என்பதை ஆய்வு செய்து அதன் மூலம் வெற்றியை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தேடுதல் வேட்டையில் உள்ளூர் பொதுமக்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சட்லஜ் ஆற்றில் உள்ள கசாங் நலா என்ற நீர்வீழ்ச்சி மிகவும் ஆபத்தான நீர்வீழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த ஆற்றல் சிக்கியவர்களில் வெகு சிலரது உடல் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் சைதை துரைசாமியின் குடும்பத்தினர் பெரும் கவலை கொண்டுள்ளனர்.