உலகின் மிகப் பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனம் என்று சொன்னதும் நம் கண்முன்னே விரிவது அடர்ந்து விரிந்த மணல்திட்டுகளும், சுட்டெரிக்கும் வெயிலும்தான். ஆனால் அதே சஹாரா பாலைவனம் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பச்சை பசேலென பசுமையாக இருந்தது என்று யாரவது நம்மிடம் சொன்னால் “சும்மா கதை விடாதீங்க” என்று சொல்லத் தோன்றும். ஆனால் சுற்றுச்சூழல் தொல்லியல் ஆய்வாளரான டேவிட் ரைட்டின் ஆய்வு முடிவுகள் இதைத் தான் கூறுகின்றன.
மனித வாழ்வும் பரிணாமமும் பிரிக்கமுடியா கூறுகள். இந்தப் பரிணாமங்கள் தான் இன்றைய நமது வாழ்க்கைக்கான அடிப்படை ஆதாரங்கள். இப்படி இயற்கையாகவோ,செயற்கையாகவோ ஏற்பட்ட பரிணாமங்களும், மாறுதல்களும் தான் சஹாரா என்னும் நிலத்தைப் பாலைவனமாக மாற்றிவிட்டிருக்கிறது.
இதற்காக சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் செல்ல வேண்டியிருக்கிறது. அப்போது நைல் நதிக்கரையிலிருந்து ஒரு கூட்டம் நாடோடிகளாக நகரத் தொடங்கியிருந்தது. அந்தக் கூட்டம் வெறும் மனித இனமாக மட்டுமல்லாமல் ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகளையும் கொண்டிருந்தது. இந்த ஆடுகளும் மாடுகளும் நிலத்தில் மேய்ந்தும், நிலத்தை உழுதும், அதனைப் பண்படுத்தியும் வந்ததன் மூலம் அந்த இடங்களின் தட்பவெப்பத்தை எல்லாம் தீர்மானிக்கும் செயலிகளாக இருந்திருக்கின்றன.
வெறும் கால்நடைகள் மட்டும் தான் இதைத் தீர்மானித்திருக்குமா என்றால் ஆம் என்கிறார் ரைட். ஏனெனில் பொதுவாக கால்நடைகள் மட்டும் தான் மனிதனுக்குக் கட்டுப்படும் இயல்புடையவை என்பதால் காட்டு விலங்குகளுக்கு இதில் பெரிய பங்கு எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. காட்டு விலங்குகள் மனிதனால் வேட்டையாடப்படும் வாய்ப்பு இருப்பதால் இவை மனித நடமாட்டம் இருக்கும் இடத்தில் தலைகாட்டவே வாய்ப்பு இல்லையாம்.
அது சரி இப்படி கால்நடையும், மனிதனுமாக இருந்து வந்த இந்த சஹாரா எப்படி பாலைநிலம் ஆகியிருக்கும்?
அதீத மேய்ச்சல் தான் இதற்கான முழு முக்கிய காரணம் என்கிறார் ரைட். நாம் வெயிலில் செல்லும் போது கருமை நிற ஆடைகளைத் தவிர்த்து வெண்மை ஆடைகளை அணிவதன் நோக்கம் மெல்லிய நிற ஆடைகள் அதிகம் ஒளியை எதிரொளிக்கும் இயல்புடையவை என்பதால்தான். பொதுவாகவே மெல்லிய நிறங்கள் ஒளியை உள்வாங்காமல் எதிரொலிக்கும் இயல்புடையவை. கால்நடைகளால் அதிகமாக மேய்ச்சலுக்கு உட்பட்ட இந்த நிலங்களும் சூரிய ஒளியை உள்வாங்காமல் எதிரொளித்து மீண்டும் வளிமண்டத்துக்கே அனுப்ப வளிமண்டலம் ஒருகட்டத்தில் மிகுந்த வெப்பமாகிப் போனது. வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களில் பொதுவாக மேகங்கள் உருவாக்கும் வாய்ப்புகளும் குறைந்து போகும். மேகங்கள் இல்லையெனில் மழையும் இல்லை. இப்படி மழையே இல்லாத சஹாரா நிலம் நாளடைவில் பாலைவனமாக மாறிவிட்டது.
இவையெல்லாம் தடாலடியாக எல்லாம் நடக்கவில்லை. முதலில் இந்த அதீத மேய்ச்சல் அங்கு வறட்சியைத் தான் உண்டு பண்ணியது. இந்த வறட்சி நாளாக நாளாக அங்குள்ள பசுமையைக் காணமல் போக செய்ய அது மேலும் கடும் வறட்சிக்கான பாதையை உருவாக்கி பசுமையான சஹாராவை பாலைவனமாக மாற்றியிருக்கிறது.
இது மட்டுமல்லாமல் புவியின் சுற்றுவட்டப்பாதையில் ஏற்பட்ட மாற்றங்களும் இதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. சுற்றுவட்டப்பாதையில் மாற்றம் ஏற்படும் போது அது காலநிலையிலும் குறிப்பிடும் மாற்றத்தை உருவாக்குவதுண்டு. அப்படி சஹாராவின் வெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றம் அங்கு பெய்யும் மழைப்பொழிவையும் பாதித்து இருக்கக்கூடும் என்கிறார் ரைட்.
இருப்பினும் இந்த ஆய்வில் இன்னும் கண்டறியப்படாத, புலப்படாத உண்மைகளும் கேள்விகளும் புதைந்து இருப்பதை ஒத்துக்கொள்ளும் ஆராய்ச்சியாளர் பாலைவனத்திலுள்ள படிமங்களையும், அங்குள்ள ஏரியின் கீழுள்ள சுவடுகளையும் ஆய்வு செய்து தட்பவெப்பநிலையில் தாவரத்தின் பங்களிப்பையும், கால்நடைகளின் பங்களிப்பையும் நோக்கி வரும் நாள்களில் தன்னுடைய ஆராய்ச்சியைக் கொண்டு செல்வதாகக் குறிப்பிடுகிறார்.
எல்லோருடைய ஆராய்ச்சியைக் போலவும் இவரின் ஆராய்ச்சியை ஆதரித்தும் எதிர்த்தும் பல ஆராய்ச்சியாளர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டுக் கொண்டிருந்தாலும் அறிவியல் உலகில் இது குறித்து வைக்கப்பட வேண்டிய கண்டுபிடிப்பு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் உண்மை என்னும் வகையில் இதே போன்ற பாதிப்பு அமேசான் காடுகளையும் தாக்கும் அபாயம் உண்டு. இதனால் புவியின் வெப்பமும் யாரும் எதிர்பார்க்க வகையில் மேலும் உயருவதற்கான வாய்ப்புண்டு என்பது ரைட்டின் கணிப்பு.
இது குறித்து கூறும் ரைட் "நமது முன்னோரின் தவறிலிருந்து பாடம் படிக்க வேண்டியவர்கள் நாம். கடந்த காலம் என்பவை எப்போதும் நம் வருங்காலத்திற்கான ஜன்னல்கள் போன்றவை. நம் முன்னோர்கள் இப்படி செய்தால் இதன் விளைவு இன்னது என்று தெரியாமல் செய்தார்கள். நாமும் அதே தவற்றை எல்லாம் தெரிந்து இருந்தும் செய்ய கூடாது. இயற்கை தன்னை தானே மீட்டுருவாக்கம் செய்யும் இயல்புடையது தான். ஆனால் அதன் எல்லையைத் தாண்டி அதை அபகரிக்கும் பட்சத்தில் நாமே இயற்கைக்கு எதிராக மாறிவிடுகிறோம் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்." என்கிறார்.
நம்மைக் காக்கும் இயற்கையை நாம் காக்கவில்லை எனினும், அதைக் களவாடும் கயவர்களாக இல்லாமல் இருத்தலே இப்போது அவசியமாக இருக்கிறது.