ஹமாஸ் அமைப்பினரைத் தாக்க விரைவில் காசாவுக்குள் நுழைய உள்ளோம் என்று இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புப் படைகள் தலைமை தளபதி அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் தலைநகர் டெல்அவில், ஜெருசலேம் நகரங்களில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் உச்சக்கட்ட பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் உச்சத்தை அடைந்து வருகிறது. ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு செல்லும்படி பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. வடக்கு காசாவில் சுமார் 199 பேரை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவர்களை மீட்கும் வகையில் காசாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹமாசை அழிப்போம் என்ற முழக்கத்துடன் இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருகிறது.
அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைச் செலுத்தி போரைத் தொடங்கினர். இது வரை பாலஸ்தீனத்தைச் சார்ந்த 2670 பேரும் இஸ்ரேலியர்கள் 1300 பேரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.