வாகனத்தில் சாலையில் போய்க் கொண்டிருக்கும் நம்மை பின் தொடர்ந்து வரும் வாகனங்கள் ஒரு கட்டத்தில் வேறு பாதையில் திரும்ப நேரிடும். ஆனால், அதே சாலையில் நாம் நம்முடைய பயணத்தைத் தொடங்கிய போது பின் தொடர ஆரம்பித்த சாலையில் வரையப்பட்டிருக்கும் கோடுகள் நாம் நம்முடைய இலக்கை சென்றடையும் வரை பின் தொடரும்.
இந்த கோடுகள் ஒவ்வொரு வாகனங்களையும் பின் தொடரும் வகையில், அனைத்து சாலைகளிலும் அதன் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. மேலும், பல ரூபங்களில் அவை சாலையில் காட்சியளிக்கின்றன. நீண்ட நெடிய வெள்ளை கோடு, மஞ்சள் நிற கோடு, உடைந்த மஞ்சள் மற்றும் வெள்ளை நிற கோடு என பல வகைகளில் அவை இருக்கின்றன.
இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அர்த்தங்களையும், அடையாளங்களையும் கொண்டிருக்கின்றன. அதாவது, சாலையில் வரையப்பட்டிருக்கும் வெவ்வேறு விதமான கோடுகளும், அவை வாகன ஓட்டிகளுக்கு என்ன சொல்ல வருகின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் காணலாம்.
வெள்ளை கோடுகள்:
வெள்ளைக் கோடுகள் ஒரே பாதையில் உள்ள போக்குவரத்தை பிரிக்க உதவும். இது மூன்று வகைகளாக உள்ளது. ஒற்றை உடைந்த, ஒற்றை திடமான மார்க்காக மற்றும் இரட்டை திடமான மார்க்காக அவை இருக்கின்றன. இதில், ஒற்றை உடைந்த தோற்றத்தில் இருக்கும் கோடுகள், நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போது ட்ராக்கை மாற்றிக் கொண்டு பயணிக்கலாம் என்பதை குறிக்கின்றது.
அதேநேரத்தில் ட்ராக்கை மாற்றி செல்லும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ட்ராக்கை மாற்றுவது பாதுகாப்பானது என தெரிந்தால் மட்டுமே மாற்ற வேண்டும். அதிக திக்காக ஒத்தையாக காட்சியளிக்கும் வெள்ளைக் கோடு, ட்ராக்கை மாற்றுவதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
ஆம், இந்த கோடுள்ள சாலையில் எடுத்தோம், கவுத்தோம் என மாறக் கூடாது. ஆனால், நாட்டில் உள்ள பல வாகன ஓட்டிகள் இதனைக் கடைப்பிடிப்பதே இல்லை. இதன் விளைவாக விபத்து போன்ற பல்வேறு சிக்கல்களில் அந்த வாகனங்கள் சிக்குகின்றன. இரட்டை அடர்த்தியான வெள்ளை நிற கோடுகள்; கடுமையான தடையைக் குறிக்கின்றது. அதாவது நீங்கள் எந்த காரணத்திற்காகவும் இந்த லைனைக் கடக்கூடாது என்பதே இதன் பொருளாகும்.
தொடர் மஞ்சள் நிற கோடு:
தொடர் மஞ்சள் நிற கோடுகள் இரு திசை வழி பாதையைக் குறிக்கின்றன. மேலும், இரு திசை பயணத்திற்கான பாதையை பிரிக்கும் வகையில் இது வரையப்படுகின்றது. இந்த லைனை ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் ஜம்ப் செய்வது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இரட்டை தொடர் மஞ்சள் நிற கோடு:
மிகவும் கடுமையான சாலை என்பதை இது குறிக்கின்றது. ஆகையால், இந்த கோட்டை கடப்பது என்பது மிகக் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஓவர்டேக்கிங் இல்லை, யு-டர்ன்கள் இல்லை மற்றும் இரு புறத்தில் இருந்து எந்த பக்கத்திலும் ஜம்ப் செய்யக் கூடாது என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான இரு வழி சாலையைக் குறிக்கும் பொருட்டு இக்கோடு பயன்படுத்தப்படுகின்றது.
உடைந்த (துண்டு துண்டாக காணப்படும்) மஞ்சள் நிற கோடு:
மஞ்சள் நிற கோடுகளின் பட்டியலிலேயே மிக மென்மையான ஒன்றாக இது காட்சியளிக்கின்றது. முந்தி செல்வது, யு-டர்ன் எடுப்பது என சிலவற்றிற்கு அனுமதி உண்டு என்பதையே இந்த லைன்கள் உணர்த்துகின்றன.
எட்ஜ் லைன்:
சாலையின் இரு புறத்திலும் இந்த லைன்களும் இடம் பெற்றிருக்கும். இவை சாலையின் முடிவை உணர்த்துகின்றன. வாகனங்கள் சாலையைக் கடந்து சென்று விபத்தைச் சந்திக்க கூடாது என்பதற்காக இவை வரையப்படுகின்றன. அதேநேரத்தில், இரவு நேரங்களிலும் தெளிவாக கண்களுக்கு புலப்படும் வகையில் இவை ஒளிரும் வகையில் வரையப்படுகின்றன.
வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும், விபத்தில்லா பயணங்களை உருவாக்கும் பொருட்டும் இந்த லைன்கள் சாலையில் வரையப்படுகின்றன. ஆனால், இவற்றைப் பெரும்பாலானோர் பொருட்படுத்துவதில்லை. மேலும், இவை போதியளவு விழிப்புணர்வு இல்லாதததாலும் அதிக அளவில் சாலை விபத்துகள் அரங்கேறுகின்றன.