சென்னையில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்...
உட்கட்சித் தேர்தலை இன்னும் ஒருமாத காலத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்த இருக்கிறது. அந்த உட்கட்சித் தேர்தலை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்த் 70வது பிறந்தநாள் அன்று தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையாக எழுச்சியோடு கொண்டாட உள்ளோம் செப்டம்பர் 14 கட்சியினுடைய 18 ஆம் ஆண்டு விழா ஆகிய மூன்று விழாக்களையும் எவ்வாறு நடத்த வேண்டும் என்று கூட்டம் நடைபெற்றது.
எங்களுடைய கட்சியை அடுத்தகட்டத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான ஆலோசனையாக இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. 5 வருடத்துக்கு ஒருமுறைதான் எங்கள் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடப்பது வழக்கம். விஜயகாந்த் நலமாக உள்ளார். அவர் மாதம்தோறும் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு செல்லுவது வழக்கம். அதிமுக செய்த தவறுதான் இன்று அவர்கள் ஆட்சி இழந்து இருக்கிறார்கள். இப்பொழுது அதைப் பற்றி அவர்கள் வருந்துகிறார்கள். நாங்களே சொன்னதை அவர்கள் சரியான நேரத்தில் செய்திருந்தால் இன்று அவர்கள் ஆட்சியில் இருந்து இருப்பார்கள்.
உண்மையான எதிர்க்கட்சியாக தேமுதிக தான் செயல்படுகிறது. தமிழகத்தில் நடந்த அனைத்து பிரச்சினைக்கும் முதல் குரலாக தேமுதிக கொடுத்தது. மக்களுக்காக எங்களுடைய குரலை தைரியமாக கொடுத்திருக்கிறோம். ஊழல் பற்றி அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். அதைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. அவர் யார் மீது குற்றம் சாட்டுகிறாரோ அதை அவர் நிரூபிக்க வேண்டும். யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த் முடிவு எடுப்பார்.
ஆட்சியில் இல்லாதவர்கள் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் செய்வதற்கும், பேசுவதற்கும் எதுவுமில்லை. கரூர் சென்றிருந்தபோது அங்கு சாலை போடவே இல்லை. சாலை போடப்பட்டதாகக் கூறி செந்தில் பாலாஜி 3 கோடி ரூபாய் பில் போட்டிருப்பதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளார்கள். ஸ்காட்லாந்துக்கு நிகராக தமிழக காவல் துறை செயல்பட்டது. ஆனால், இன்று மோசமாக உள்ளது. சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய வேண்டும்.
இன்று மக்கள் வேலை இல்லாததால் குறுக்கு வழியில் சம்பாதிப்பதற்கு, ஆன்லைன் ரம்மி போன்ற தளங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு நஷ்டமடைந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். நிரந்தரமாக தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டியது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடனேயே நீட்டை ஒழித்து விடுவோம் என்று கூறினார். இப்போது அதைப் பற்றி கேட்டால் வாயை திறக்கமாற்றார். மாதந்தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறி இப்பொழுது அதை தரவில்லை.
ஆளுநர் அவரது வேலையை செய்தாலே போதும். முதலமைச்சர் அவரது வேலையை செய்தாலே போதும். ஆளுநரை குறை சொல்லி ஆட்சியாளர்களும், ஆட்சியாளர்களை சொல்லி ஆளுநரும் என்ற நிலைதான் உருவாகி உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் குறித்து எப்போதும் ஆளுநர்தான் முடிவு எடுப்பார் அதை இப்பொழுது தமிழக அரசு முடிவெடுக்க பார்க்கிறது. ஆதீனம் அரசியல் பேசுவது தவறு. ஆன்மீகவாதி அரசியல் பேசக்கூடாது. அரசியல்வாதி ஆன்மீகம் பேசக்கூடாது. அவரவர் வேலையை அவரவர் செய்தாலே இங்கு சர்ச்சைக்கு வேலை இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.