அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம், நாளை (ஜனவரி 22) நடக்க உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, அன்றைய தினம் பக்தர்களுக்கு கோயிலுக்கு வர அனுமதி தரப்படவில்லை. குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில் இந்த கும்பாபிஷேகத்தைக் காண அனைவரும் ஆர்வமாக இருக்கும் நிலையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக முக்கிய தலைவர்களுக்கு அயோத்திக்கு நேரில் வர கட்சித்தலைமை திடீரென தடை விதித்துள்ளது.
மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் அயோத்திக்கு நேரில் வராமல், அவரவர் மாநிலங்களில் ஏதாவது ஒரு கோயிலில், மக்களுடன் இணைந்து, டிஜிட்டல் திரையில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவைக் காண வேண்டும்.
மேலும், சிறப்பு வழிபாடு, பஜனையில் பங்கேற்க வேண்டும் என, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைமை அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது.
அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காஞ்சிபுரத்தில் மக்களுடன் இணைந்து, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை திரையில் காண இருப்பதாகவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், தமிழகத்தில் ஏதாவது ஒரு கோயிலில் மக்களுடன் அமர்ந்து, கும்பாபிஷேகத்தை காண இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.