இந்திய வாகன வடிவமைப்பில் ராம்கிருபா ஆனந்தனின் பயணமும், அவர் ஏற்படுத்திய தாக்கமும் பாராட்டத்தக்கவை. எஸ்யூவி கார்கள் என்றால், நமக்கு முதலில் நினைவில் வருவது தார் (Thar), எக்ஸ்யூவி700 (XUV700) மற்றும் ஸ்கார்பியோ போன்ற மாடல்கள். இந்த கார்கள் மஹிந்திரா நிறுவனத்தின் மாடல்கள். இந்த மாடல்களின் வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர் ராம்கிருபா ஆனந்தன்.
ராம்கிருபா ஆனந்தன் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். அவர் பிட்ஸ் பிலானியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், ஐஐடி பாம்பேயில் டிசைன் மாஸ்டர் பட்டமும் பெற்றுள்ளார். 1997-ல் மஹிந்திரா நிறுவனத்தில் இன்டீரியர் டிசைனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது திறமைகளுக்காக வெகுவிரைவாக அங்கீகாரம் பெற்றார்.
மஹிந்திராவில் தனது ஆரம்பகாலத்தில் பொலீரோ, ஸ்கார்பியோ மற்றும் சைலோ போன்ற கார்களின் உட்புறங்களை வடிவமைத்தார். 2005-ல் வடிவமைப்புத் துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் வடிவமைக்கப்பட்ட மஹிந்திரா XUV500 காரோ மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, 2019-ல் தலைமை வடிவமைப்பாளராக நியமிக்கப்பட்ட ராம்கிருபா, மஹிந்திராவின் எதிர்கால வாகனங்களின் தோற்றத்தை மாற்றினார்.
மஹிந்திரா தார், XUV700 மற்றும் ஸ்கார்பியோ ஆகியவை இந்தியாவில் மிகவும் பிரபலமான கார்கள். இந்த மாடல்கள் அனைத்தும் ராம்கிருபாவின் தொலைநோக்கு பார்வையும், கிரியேட்டிவிட்டிக்கும் அடையாளமாகும். குறிப்பாக மஹிந்திரா தார் இந்திய வாகன வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
2022-ல் ராம்கிருபா ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் டிசைன் பிரிவின் தலைவராக இணைந்தார். இதன் மூலம் அவர் மின்சார வாகனங்களுக்கான டிசைன்களை வடிவமைக்கத் தொடங்கினார். மின்சார வாகனங்களில் புதுமையான அணுகுமுறையை கையாளும் ஓலா எலக்ட்ரிக், எதிர்காலத்துக்கான பல லட்சிய திட்டங்களைக் கொண்டுள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் ராம்கிருபா ஆனந்தனின் பயணம் அவரது கடுமையான அர்ப்பணிப்பையும், பல்துறைத் திறனையும் வெளிப்படுத்துகிறது. மஹிந்திராவில் தொடங்கி, தற்போது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் அவர் தொடர்ந்து புதுமையான மற்றும் பயனுள்ள டிசைன்களை உருவாக்கி வருகிறார். எலெக்ட்ரிக் வாகனங்கள் முக்கிய நீரோட்டமாக மாறும் போது, ராம்கிருபா போன்ற வடிவமைப்பாளர்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பர்.
ராம்கிருபா ஆனந்தன் ஒரு சிறந்த வடிவமைப்பாளர் மட்டுமல்ல, அவர் ஒரு தொலைநோக்கு பார்வையாளர். அவரின் திருச்சியாய் இருக்கும் "ராம்கிருபா டச்" எப்போதும் நிலைத்திருக்கும். இவ்வாறு, அவர் இந்திய ஆட்டோமொபைல் டிசைனின் எதிர்காலம் என்று அழைக்கப்படுகிறார்.