வர இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலியொட்டி தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக ஏற்கெனவே தனது கூட்டணி கட்சிகளிடம் அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில், பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகின்றன.
பாஜகவை பொறுத்தவரை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 20 முதல் 30 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 12 மக்களவை தொகுதிகள் உடன் ஒரு நாடாளுமன்றத் தொகுதியை பாஜகவிடம் பாமக கேட்பதால் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசி உள்ளார்.
தேமுதிகவிடமும் பாஜகவினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 4 மக்களவை தொகுதிகளுடன் ஒரு ராஜ்ஜியசபா தொகுதியை தேமுதிக கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் அதிமுக சார்பில் தேமுதிகவிடம் முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதிலும் அதிமுகவிடம் ஒரு ராஜ்யசபா இடத்தை தேமுதிக கேட்பதால் தகவல் வெளியாகி உள்ளது.