தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 9, 10, 13, 14-ம் தேதிகளில் அவர் பிரச்சாரம் செய்கிறார். அதன்படி, நாளை (ஏப்ரல் 9) தமிழகம் வரும் பிரதமர் மோடி, மாலை 4 மணிக்கு வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்சாரம் செய்கிறார். அப்போது, தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி மற்றும் கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆரணி, சிதம்பரம், கடலூர் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
நாளை மாலை 6 மணிக்கு தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தியாகராய நகரில் ‘ரோடு ஷோ’ மூலம் மோடி பிரச்சாரம் செய்கிறார். அப்போது பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ மூலம் பிரதமர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதில், மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மற்றும் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம் தொகுதி பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்கிறார்.
இந்த ‘ரோடு ஷோ’ நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்த பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதற்கான முன்னேற்பாடுகளை தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பார்வையிட்டார். பனகல் பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, 10-ம் தேதி காலை 11 மணிக்கு நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவாக ‘ரோடு ஷோ’ மூலம் பிரதமர் பிரச்சாரம் செய்கிறார். பின்னர், கோவையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
.இதைத் தொடர்ந்து, 13-ம் தேதி பெரம்பலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர், 14-ம் தேதி விருதுநகரில் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரையும் ஆதரித்து பேசுகிறார். பிரதமர் மோடி நாளை வர உள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக சென்னை பெருநகரில் வரும் 29-ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இவற்றை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.