இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரத்தில் பிரதமர் மோடி இஸ்ரேல் பக்கம் நிற்கிறார் என்று விமர்சனம் எழுந்த நிலையில் மோடி பாலஸ்தீனத்தின் பக்கம்தான் நிற்கிறார் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் தீவிரமாக நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலகம் முழுக்க இஸ்ரேலுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்தியாவோ தொடக்கத்திலிருந்து இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. பாலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததை எதிர்ப்பு போராடி வரும் நிலையில் மோடி அரசின் நிலைப்பாட்டைக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
மருத்துவமனை தாக்குதலில் 500 பேர் உயிரிழந்த நிலையில் மோடி அரசின் நிலைப்பாடு பற்றி பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த சூழலில் பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அரசின் நிலைப்பாடு பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர், "பிரதமர் மோடி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக உள்ளார். ஆனால், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளை அவர் ஆதரிக்கவில்லை" என்று கூறினார்.
பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் இஸ்ரேலை ஆதரித்து வருகின்றனர். அமைச்சரின் இந்த பேச்சு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்!