ஜூலை 11 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டு பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த நீதிமன்றம் யூகித்து முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை எனக்கூறி பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி வழங்கினார். இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இரவு 2 மணியளவில் நீதீபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திட்டமிட்டபடி பொதுக்குழு நடத்தலாம்,
அதில் 23 தீர்மானம் மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாமே தவிற எந்த முடிவும் எடுக்க கூடாது என உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு உறுப்பினர் சி.வி.சண்முகம் அறிவித்தார். மேலும், நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதனை, பொதுக்குழு உறுப்பினர்கள் டி.ஜெயக்குமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் வழிமொழிந்தனர். இதையடுத்து, அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல, பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதை வழிமொழிந்த டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதே நீதிமன்ற அவதிப்பாக உள்ளபோது, அடுத்தப் பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அவர் அறிவித்தது மன்னிக்க முடியாத செயலாகும் என்றும், நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.