Breaking News :

Monday, April 29
.

ஓபிஎஸ்ஸுக்கு வாக்கு சேகரிப்பு: பாஜக அண்ணாமலை


ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகப் போட்டியிடும், அன்பு அண்ணன் திரு O.பன்னீர் செல்வம் அவர்களுக்கு, பலாப்பழம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம். தமிழக அரசியலில், தன்னலமற்ற தலைவராக விளங்கும் அண்ணன் O.பன்னீர் செல்வம் அவர்கள், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து, பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்கவிருப்பது, தேசிய அளவில், அவருக்கும், ராமநாதபுரம் தொகுதிக்கும் பெரும் மரியாதையைப் பெற்றுத் தரும். இந்திய அரசியல் வரலாற்றில், வெகுசிலருக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

தமது சொத்துக்களை, 16 பங்காகப் பிரித்து, சிறுபான்மையினர் உள்ளிட்ட நிலமற்ற எளியவர்களுக்குக் கொடுத்த தெய்வத் திருமகனாரை, திமுக தொடர்ந்து, அவமானப்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் வளர்ச்சி அடையாமல் இருக்கக் காரணம் தேவர் ஐயா என்று, திமுக அமைச்சர் கூறுகிறார். திமுகவின் இந்த அகங்காரத்துக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். தேவர் ஐயா அவர்களின் தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில், அனைவரையும் அரவணைத்துச் செல்லும், அவரது கொள்கையின்படி நடக்கும் அண்ணன் திரு O.பன்னீர் செல்வம் அவர்களைத் தேர்ந்தெடுத்து, பாராளுமன்றத்தில், ராமநாதபுரத்தின் குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், அண்ணன் O.பன்னீர் செல்வம் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

 

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். அதில் ஒன்று, நமது ராமநாதபுரம் மாவட்டம். வளரும் மாவட்டமாக ராமநாதபுரத்தை அறிவித்து, அதன் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை நமது பிரதமர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார். இதனைப் பயன்படுத்தி, நமது ராமநாதபுரம் மாவட்டம் முழுமையான வளர்ச்சி பெற, தமிழகத்தின் முதலமைச்சராக, அனைத்துத் துறைகளும் குறித்து முழுமையாக அறிந்த அண்ணன் திரு O.பன்னீர் செல்வம் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

 

நமது பிரதமர் திரு. மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, ராமநாதபுரத்தின் வளர்ச்சிக்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் குழாயில் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், ராமநாதபுரத்தின் திமுக பாராளுமன்ற உறுப்பினர், தனது சொந்த ஊருக்கே தண்ணீர் கொடுக்காமல் இருக்கிறார். மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தாமல், மக்களை அவதிக்குள்ளாக்கியிருக்கிறார். திமுக ஆட்சியில், ராமநாதபுரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. வேலைக்காக, சொந்த ஊரை விட்டு, வெளியூருக்கு, வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

 

ராமநாதபுரத்திற்கு திமுக செய்த மிகப்பெரிய துரோகம், கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது. கச்சத்தீவைக் கொடுப்பதற்கு ஒரு மாதம் முன்பாகவே, அன்றைய திமுக முதலமைச்சர் மறைந்த கருணாநிதி அவர்களுக்குத் தெரிவித்து விட்டுத்தான், கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி இலங்கைக்குத் தாரைவார்த்தது. ஆனால், திமுக அதை மக்களிடம் கூறவே இல்லை. கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதை எதிர்த்த ஒரே பாராளுமன்ற உறுப்பினர், ஐயா மூக்கையா தேவர் அவர்கள் மட்டும்தான். கச்சத்தீவைக் கொடுத்ததால், நமது மீனவ சகோதரர்கள் இத்தனை ஆண்டு காலமாக அனுபவித்த கொடுமைகள் ஏராளம். இதனை எல்லாம் சரி செய்ய, நாம் கச்சத்தீவை மீட்க வேண்டும். நமது பிரதமர் மோடி அவர்கள், 400க்கும் அதிகமான இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் போது, கச்சத்தீவை முழுமையாக மீட்போம். அந்த 400 பாராளுமன்ற உறுப்பினர்களில், அண்ணன் திரு O.பன்னீர் செல்வம் அவர்களும், நமது ராமநாதபுரம் தொகுதியில் இருந்து துணையிருக்க வேண்டும்.

 

ராமநாதபுரம் மீனவச் சொந்தங்கள் எதிர்கொள்ளும் மற்றுமொரு பிரச்சினையான கடல் அட்டை பிரச்சினைக்கு மூலகாரணம் திமுகவின் டி.ஆர்.பாலு அவர்கள். அவரது தொழில் வளர்ச்சிக்காக, கடல் அட்டை பிரச்சினையை உருவாக்கியிருக்கிறார். அண்ணன் திரு O.பன்னீர் செல்வம் அவர்கள், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், கடல் அட்டை பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு மத்திய அரசின் உதவியோடு ஏற்படுத்தப்படும் என்ற உறுதியை அளிக்கிறேன்.

 

வரும் ஜூன் 4 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியலில் நிச்சயம் பெரிய மாற்றம் உருவாகும். மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் அம்மா ஜெயலலிதா அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்ற அண்ணன் திரு O.பன்னீர் செல்வம் அவர்கள் கரங்கள், தமிழக அரசியலில் வலுப்படும். அதிமுகவின் தொண்டர்கள், உண்மையான தலைவரான அண்ணன் O.பன்னீர் செல்வம் பக்கம் வருவார்கள் என்றார்  மாநில தலைவர்  K. அண்ணாமலை.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.