நானும் ஒரு டெல்டாகாரன் என்ற பாச உணர்வோடு மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்ட மக்களுக்கான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தேன்.
சிலர் போல, தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள் அல்ல நாங்கள். எப்போதும் எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு மக்களோடு அவர்களின் உரிமைகளுக்காக நிற்பவர்கள்!
நாம் என்றும் மக்கள் பக்கம்! மக்கள் என்றும் நம் பக்கம்!
மயிலாடுதுறை மாவட்டம் வாணகிரி மீன் இறங்குதளம் 30 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
நாகை மாவட்டம் செருதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரை பாதுகாப்புச் சுவர் அமைக்கப்படும்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.
பூம்புகார் பகுதி மீனவர்கள் பயன்பெறும் வகையில், 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலர்மீன் தயாரிக்கும் குழுமம் அமைக்கப்படும்.
தமிழ்நாடு வருவாய்த்துறை வரலாற்றிலேயே, கிராமப்புற நத்தம் பட்டாவை கணினி மூலமாக வழங்குவது இதுதான் முதல்முறை.
சீர்காழி வட்டம் பெருந்தோட்டம் கிராமத்தில் செல்லனாற்றின் குறுக்கிலும், சென்னம்பட்டினம் கிராமத்தில் முல்லையாற்றின் குறுக்கிலும், தரங்கம்பாடி வட்டம் சந்திரப்பாடி கிராமத்தில் நண்டலாற்றின் குறுக்கிலும், உப்பு நீர் புகுவதை தடுக்கின்ற வகையில், கடைமடை நீர் ஒழுங்கிகள் 44 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
குத்தாலம் வட்டத்தில் வாணாதி ராஜபுரம் மற்றும் அரையபுரம் வாய்க்கால் பாசன உழவர்கள் பயன்பெறுகின்ற வகையில், கடலங்குடி கிராமத்தில் புதிய படுக்கை அணை அமைக்கப்படும்.