விழுப்புரத்தில் மிஸ்கூவாகம்-2024 அழகி போட்டி நேற்று 22 ஏப்ரல் 2024 அன்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். திருநங்கைகள் பூசாரி கைகளால் தாலி கட்டிகொண்டு வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
பின்னர் கூத்தாண்டவர் தேரோட்டமும் நடைபெறும். இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து திருநங்கைகள் வந்து கலந்து கொள்வர். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கு திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு நேற்றுமுன்தினம் சென்னை திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகளுக்கான கலைநிகழ்ச்சியும், அழகி போட்டியும் நடத்தப்பட்டன.
அதில் சென்னையை சேர்ந்த ஷாம்சி முதலிடத்தை பிடித்து மிஸ் கூவாகம் அழகி பட்டத்தை வென்றார். 2வது இடத்தை தூத்துக்குடியை சேர்ந்த வர்ஷாஷெட்டி, 3வது இடத்தை தூத்துக்குடியை சேர்ந்த சுபப்பிரியா பிடித்தனர். இதை தொடர்ந்து நேற்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை இணைந்து மிஸ்கூவாகம் – 2024 அழகி போட்டி மற்றும் திருநங்கைகளுக்கான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கைள் பலர் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியும், ஆடி, பாடி திறமைகளை வெளிபடுத்தினர். தொடர்ந்து மிஸ்கூவாகம்-2024 அழகி போட்டி நடைபெற்றது. மூன்று சுற்றுகள் வாரியாக போட்டிகள் நடைபெற்றன. முதல் சுற்றில் 27 திருநங்கைகள் பங்கேற்றனர்.
ஒய்யாரமாக நடந்துவந்த திருநங்கைகளின் நடை, உடை, பாவனை அடிப்படையில் 2வது சுற்றுக்கு 15 பேரை ஒருங்கிணைப்புகுழு தேர்வு செய்தது. பின்னர் இரவு நகராட்சி திடலில் மிஸ் கூவாகம்-2024 அழகி போட்டிக்கான இறுதிசுற்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் பொன்முடி, எம்எல்ஏக்கள் லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், திமுக மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகரமன்ற தலைவர் தமிழ்செல்விபிரபு மற்றும் திரைப்பட நடிகை, நடிகர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இறுதி சுற்றில், மேடையில் வலம்வந்த திருநங்கைகளிடம் பொதுஅறிவு, பாலினம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது.