கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களை இழிவுபடுத்திய நடிகை குஷ்புவுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான திருமதி, கீதா ஜீவன் அவர்கள் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு,
நடிகை குஷ்பு அவர்கள் முதலமைச்சர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைப் பற்றி மிக இழிவாகப் பேசியிருக்கிறார்கள். குறிப்பாகத் தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையைப் பிச்சை போடுவதாக இழிவுபடுத்தியுள்ளார்கள். உரிமைத்தொகையைப் பெறுகின்ற அந்த ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் இழிவுபடுத்தி அந்த அம்மா பேசியிருப்பது மிகவும் வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை அறியாதவர் அவர் என்பதை நாம் இதன் மூலம் அறிய முடிகிறது. அந்த அம்மாவுக்கு என்ன தெரியும்? தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் - நடுத்தர வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா? அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கைப் பார்த்துப் பேசுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்த மாதிரி பேசக்கூடாது. நிலை அறியாமல் நீங்கள் பேசுகிறீர்கள் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், உங்களுக்குத் தெரியாது. மாதம் ஆயிரம் ரூபாய் என்பது உங்களுக்கு அப்படித்தான் தெரியும். நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். நீங்கள் பெரிய நடிகர். உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும். ஆனால் இந்த மாதிரி ஆயிரம் ரூபாய் வைத்துக் குடும்பம் நடத்துகிற, வாழ்வாதாரத்துக்காக, ஒரு மருத்துவச் செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக எத்தனையோ பேருக்குப் பலன் தருகிறது.
அதனைச் சிலர் “முதலமைச்சர் எனக்குத் தரும் சீர்” என்று சொல்கிறார்கள். சில தாய்மார்கள், “என் பிள்ளைகள் என்னைப் பார்த்துக்கொள்ளாவிட்டாலும், மவராசன் முதலமைச்சர் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னைப் பார்த்துக்கொள்கிறார்” எனச் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவக்கூடிய உரிமைத்தொகையை நீங்கள் அசால்டா “பிச்சை போடுகிறார்” என்ற வார்த்தையைச் சொல்கிறீர்கள். பிச்சை என்பதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படி எல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக இதற்கு எங்களுடைய தமிழ்நாட்டு பெண்கள் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களும் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள் என்பதை மட்டும் நான் கூறிக் கொள்கிறேன்.