பூமியின் மையப்புள்ளி... மெக்கா மீது விமானங்களால் பறக்க முடியாது... தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியங்கள்!
மெக்கா மீது விமானங்களால் ஏன் பறக்க முடிவதில்லை? என்பதற்கான பிரம்மிப்பூட்டும் காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்..
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா இஸ்லாமியர்களின் புனிதமான நகரங்களில் மிகவும் முக்கியமானது. மெக்கா நகரில் இருக்கும் பரிசுத்தமான காபாவின் மீது விமானங்களால் பறக்க முடியாது.
அத்துடன் காபாவின் மீது பறவைகள் அமராது எனவும் மற்றும் காபாவின் மீது பறவைகள் பறக்காது எனவும் பலர் கூறி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். இந்த இரண்டு கூற்றுகளும் உண்மைதானா?
காபா என்பது சாதாரண கட்டிடம் மட்டும் கிடையாது. உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமிய மக்களால் மதிக்கப்படும் ஒரு தெய்வீகமான கட்டிடம்தான் காபா.
காபாவின் மீது விமானங்களால் பறக்க முடியாதது ஏன்?
காபாவின் மீது விமானங்களால் பறக்க முடியாது என்பதற்கு 3 சாத்தியமான விளக்கங்கள் உள்ளன.
1. வணிக ரீதியிலான விமானங்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக மெக்கா நகரை சவுதி அரேபிய அரசு வகைப்படுத்தியுள்ளது. மெக்கா நகரின் புனிதத்தன்மை கருதியும் மற்றும் அந்நகரின் மீதான மரியாதை காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காபாவின் மீது விமானங்களால் பறக்க முடியாது என்பதற்கு இது முதல் காரணம்.
2. இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மெக்கா நகருக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை. காபா அல்லது மெக்காவின் மீது விமானங்கள் பறக்க அனுமதி வழங்கப்படாமல் இருப்பதற்கு இது இரண்டாவது காரணம். விமானங்கள் பறக்க அனுமதி வழங்கப்பட்டால், இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் பலர் மெக்கா நகரத்தை வான் வழியாக கடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மெக்கா நகருக்கு செல்வதற்கு இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மெக்கா நகரத்திற்குள் நுழையவோ அல்லது அதன் வழியாக பயணிப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது. இந்த எச்சரிக்கையை மீறி மெக்கா நகரத்திற்குள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் நுழைந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்படி உச்சகட்ட அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் அந்த நபர் நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அதே சமயம் இஸ்லாமியர்கள் யாராக இருந்தாலும் மெக்காவிற்கு செல்ல முடியும். சன்னி, ஷியா, ஆண், பெண், சவுதி அரேபியர், ரஷ்யர், சீனர், இந்தியர் என்பதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. இஸ்லாமியர்களாக இருந்தால் போதுமானது.
3. மெக்கா நகரில் விமான நிலையம் இல்லை என்பது காபாவின் மீது விமானங்கள் பறக்காது என்பதற்கு மூன்றாவது காரணமாக சொல்லப்படுகிறது.
மெக்காவில் ஏன் விமான நிலையம் இல்லை?
உலகம் முழுதும் உள்ள இஸ்லாமியர்கள் வந்து செல்லும் புனித நகரங்களில் மெக்கா முதன்மையானது. சமய சமயடங்குளை செய்வதற்காக இஸ்லாமியர்கள் லட்சக்கணக்கானோர் மெக்காவிற்கு வந்து செல்கின்றனர். அப்படி இருக்கையில் மெக்காவில் ஏன் விமான நிலையம் இல்லை? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இதற்கு இரண்டு சாத்தியமான காரணங்கள் இருக்கின்றன.
1. ஜெட்டாவிற்கு மிக அருகே மெக்கா அமைந்துள்ளது
ஜெட்டாவில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் மெக்கா அமைந்துள்ளது என்பதுதான் மெக்காவில் விமான நிலையம் இல்லாமல் இருப்பதற்கு மிகவும் எளிமையான மற்றும் முதன்மையான காரணம். சவுதி அரேபியாவின் முக்கியமான நகரங்களில் ஜெட்டாவும் ஒன்று. ஜெட்டாவில் விமான நிலையம் இருப்பதால், மெக்காவில் புதிய விமான நிலையம் கட்டுவது பொருத்தமாக இருக்காது என கூறுகின்றனர்.
2. மெக்காவின் காந்தப்புலம்
மெக்கா நகரில் விமான நிலையம் கட்டப்படாமல் இருப்பதற்கும், காபாவின் மீது விமானங்கள் பறக்காமல் இருப்பதற்கும் மெக்காவின் காந்தப்புலத்தை ஒரு காரணமாக கூறுகின்றனர்.
மெக்காவின் காந்தப்புலம் என்றால் என்ன?
மெக்கா நகரில் உள்ள காபா உலகின் மையப்பகுதியில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. துல்லியமாக இதுதான் உலகின் மையப்புள்ளி என்கின்றனர். ஒரு இன்ச் கூட வலது அல்லது இடது புறம் இல்லாமல் மிக சரியாக உலகின் மையப்பகுதியில் காபா இருப்பதாக பேசப்படுகிறது. இதை ஒரு அதிசயமாகவும் வர்ணிக்கின்றனர்.
எனவே அங்கு இருக்கும் காந்தப்புலம் காரணமாக விமானங்களால் பறக்க முடியாது எனவும், எனவே விமான நிலையம் கட்டப்படவில்லை எனவும் கூறுகின்றனர். ஆனால் மெக்காவின் காந்தப்புலம் என்ற கூற்றை ஒரு சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். காபா இருக்கும் பகுதியில் பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள் பறப்பதை பார்த்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
காந்தப்புலம் காரணமாக விமானங்களால் பறக்க முடியாது என்றால், ஹெலிகாப்டர்களால் மட்டும் எப்படி பறக்க முடிகிறது? என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதன் காரணமாக மெக்காவின் காந்தப்புலம் தொடர்பு கருத்து சர்ச்சைகளில் ஒன்றாகவே இருக்கிறது.
காபாவின் மீது பறவைகள் பறக்காதா?
விமானங்கள் பறக்காது என்பது வேறு விஷயம். ஆனால் காபா மீது பறவைகள் பறக்காது என்னும் கூற்றுக்கு பின்னால் உண்மை இருப்பது போல் தெரியவில்லை. காபாவின் மீது பல்வேறு பறவைகள் பறப்பதை பல முறை பார்த்துள்ளதாக பலர் கூறுகின்றனர். காபாவின் மீது பறவைகள் பறக்கும் காணொளிகளும் கூட கடந்த காலங்களில் வெளியாகியுள்ளன.
காபாவின் மீது பறவைகள் அமராதா?
காபாவின் மீது பறவைகள் அமராது என்று ஒரு சிலர் கூறி வரும் கூற்றுக்கு பின்னாலும் எவ்வித உண்மையும் இல்லை. காபாவின் மீது புறாக்கள் அமர்ந்திருந்ததை பல்வேறு முறை பார்த்துள்ளதாக பலர் கூறியுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.