ராமபிரானே தனக்கு அயோத்தியில் கோவில் கட்ட பிரதமர் மோடியை தேர்வு செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஜனவரி 22 ஆம் தேதி மதியம் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்கிறது. இந்து மதத்தினர் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் இந்த ராமர் கோவில் விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். நாட்டின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 96 வயதான அத்வானி, கும்பாபிஷேகத்தில் பங்கேற்பாரா என்பது கேள்விக் குறியாக இருந்த நிலையில் அத்வானி பங்கேற்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அண்மையில் அறிவித்தார்.
1990 ஆம் ஆண்டு குஜராத்தின் சோம்நாத்தில் தொடங்கிய ரத யாத்திரையை வழிநடத்தியவர் அத்வானி. இந்நிலையில் 'ராஷ்ட்ரதர்மா' என்ற பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள அத்வானி, உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விதி அதனை முடிவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை ராமரின் பக்தியுள்ள சீடர் என்று அழைத்த எல்.கே. அத்வானி, 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெற்ற ராமர் ரத யாத்திரையின் தேரோட்டி மட்டுமே தான் என்றும் கூறினார். 33 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடத்திய “ராம் ரத யாத்திரை” தனது அரசியல் பயணத்தில் மிகவும் தீர்க்கமான மற்றும் மாற்றத்தக்க நிகழ்வு என்றும் தெரிவித்தார்.
இன்று ரத யாத்திரை 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது என்று குறிப்பிட்டுள்ள அத்வானி, 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று காலை நாங்கள் யாத்திரையைத் தொடங்கியபோது, ராமர் மீதான நம்பிக்கை, நாட்டில் ஒரு இயக்கமாக உருவெடுக்கும் என்று எங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ரத யாத்திரையை தொடங்கியபோது, அவருடைய உதவியாளராக இருந்தவர் மோடி என்றும், அப்போது அவர் மிகவும் பிரபலமாக இல்லை என்றும் கூறினர். அந்த ரத யாத்திரை முழுவதும் மோடி தன்னுடனே இருந்தார் என்றும் மேலும் அந்த நேரத்தில் "அயோத்தியில் தனது கோவிலைக் கட்டுவதற்காக ராமர் தனது பக்தியுள்ள சீடரான மோடியைத் தேர்ந்தெடுத்ததாக தான் உணருவதாகவும் பாஜக மூத்த தலைவரான அத்வானி தெரிவித்துள்ளார்.