ஆபாசம் உடையில் இல்லை. பார்ப்பவர்களின் மனதில் தான் உள்ளது.
காமவெறியில் திரியும் ஒருவனுக்கு பெண்ணின் பிணம் கூட ஆபாசமாக தோன்றலாம்.
மேடையில் அரங்கேறும் திரைப்படங்களோ அல்லது நிகழ்ச்சிகளோ காட்சிகளை ஆபாசமாக சித்தரிக்கின்றன. அத்தகைய நிகழ்ச்சிகளில் சமயங்களில் நடிகைகள் லெக்கின்ஸ் அணிவது வழக்கம் என்று சொன்னாலாவது ஓரளவுக்கு ஏற்கும்படி இருக்கும்.
அப்படிப்பட்ட சூழலில் ஆபாசம் அந்த நிகழ்ச்சியை சார்ந்ததே தவிர அதில் அணியப்படும் உடையை சார்ந்ததல்ல. இன்னும் எத்தனை காலம்தான் ஆண்களின் முறைகேடுகளுக்கு பெண்களையே குறை சொல்ல போகிறோம்.
மறைக்க வேண்டியவைகளை மறைப்பதற்கா ஆடை?
ஆடைகளுக்கு இப்படி ஒரு பயன் உண்டு என்று இன்று வரை நான் கேள்விப்பட்டதில்லை. தூண்டுதலின் அடிப்படையில் செயலாற்றுவதால் தான், மிருகங்களை மனிதனைவிட அறிவில் தாழ்ந்தது என்கிறோம்.
அப்படியிருக்க ஆண்கள் தூண்டப்படாமல் இருக்கவே பெண்கள் அங்கங்களை மறைக்கும்படி ஆடை அணிய வேண்டும் என்றால், ஆண்கள் மனிதர்களா அல்ல மிருகங்களா?
ஒருவேளை மறைக்க வேண்டியவைகளை மறைத்து உடை உடுத்த வேண்டும் என்றால், அதில் ஆண்களுக்கு ஏன் விதிவிலக்கு? ஆண்களின் உடையில் ஆபாசம் இருப்பதாக சொல்லிக் கேட்டதில்லை.
மறைக்க வேண்டியது எது? மறைக்க கூடாதது எது? கைகள் கால்கள் கண்கள் உதடுகள் கூந்தல் போன்றவையால் தூண்டப்படும் ஆண்களும் உண்டு. பெண்கள் எப்போதும் விண்வெளி உடையைப் போல முழுவதும் மறைக்கும் படி ஆடையை அணியவேண்டும் என்று அறிவுறுத்துவோமா?
லெக்கின்ஸ் முழுதாக “மறைக்கும்” ஆடைதான். இருந்தும் அதுவும் கூடன் ஏன் ஆபாச உடையானது?
தனக்குப் பிடித்த ஆடையை அணியும் சுதந்திரம் பெண்கள் உட்பட எல்லோருக்கும் உண்டு. அதை முடக்குவது முற்போக்கு சிந்தனை அல்ல.