கர்நாடகா மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களுக்கு தடை விதித்து, சிகரெட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு விதித்தும் கர்நாடகா சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மசோதாவை, நேற்று (21-02-24) கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அதன் பின் அவர் பேசியதாவது, “கர்நாடகாவில் உள்ள கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் விற்பனை செய்ய அனுமதி இல்லை. இந்த உத்தரவை மீறினால் ரூ.100 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் நடமாடும் பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘ஹூக்கா’ பார்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து, இந்த சட்டத்திருத்த மசோதா, கர்நாடகா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.