Breaking News :

Sunday, September 15
.

அ.தி.மு.க.விற்கு எப்போதும் மக்கள் ஆதரவு உண்டு - ஜெயக்குமார் பேட்டி


மந்தவெளி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வாக்களித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

கோவையில் பட்டவர்த்தனமாக தெரிகிறது. நேற்றைய தினம் நமது முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் கழக முன்னோடிகள் அங்கு தர்ணா போராட்டம் நடத்திய பிறகுதான் ஏதோ கொஞ்சம் பேரை  வெளியேற்றியுள்ளார்கள் என்றால், அங்கு ரவுடிகள், குண்டர்கள் இருந்தார்கள் என்றுதானே அர்த்தம். முதலமைச்சரைப் பொறுத்தவரையில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையைச் செய்கிறார். ஊடகத்தின் முன்பு வந்து பசப்பு வார்த்தைகளைச் சொன்னால் அதனை மக்கள் நம்பிவிடுவார்கள் என்றால் நிச்சயமாக நம்ப மாட்டார்கள். நாங்கள் போராட்டம் நடத்திய பின்புதான் அவர்களை வெளியேற்றியுள்ளார்கள். இதனைப் பேட்டியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.  கொஞ்சம் நபர்களைத்தான் வெளியேற்றியுள்ளார்கள். இன்னும் நிறையபேர் உள்ளார்கள்.  நாங்கள் ஜனநாயக முறைப்படி தர்ணா போராட்டம் நடத்தவில்லை என்றால் அந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள் அல்லவா?  காலையில் அவர் பேட்டியில் குறிப்பிட்டது போல் இன்றும்  பல இடங்களிலே  ரவுடிகள், குண்டர்கள் எல்லாம் குவிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் தங்கள் ஆட்டக் கச்சேரியை  கோவை மாவட்டத்தில் ஆரம்பிக்க உள்ளனர். எப்படியாவது அனைத்து இடங்களையும் கைப்பற்ற நினைக்கிறார்கள். இது கண்டிப்பாக நடக்காது.

எங்களைப் பொறுத்தவரையில் பணத்தின் மீது நம்பிக்கை இல்லை.  திமுகவைப் பொறுத்தவரையில் கொள்ளை அடித்த பணம் அவர்களிடம் இருக்கிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசில் 500 கோடி ரூபாய் கொள்ளை அடித்தார்கள். ஆட்சிக்கு வந்த இந்த 9 மாதத்தில் எல்லா வகையிலும் கொள்ளை அடித்து இந்தத் தேர்தலில் ஆயிரம் கோடியை செலவு செய்துள்ளார்கள்.

என்னதான் பணத்தை வாரி இறைத்தாலும் இந்தத் தேர்தலில் திமுக வீழ்ச்சி அடையப்போவது உறுதி. 
எனவே இதற்கு எவ்வளவு விலை கொடுத்தாவது, எவ்வளவு அராஜகம் செய்தாவது, ரவுடிகள், குண்டர்களை, பணத்தை இறக்கி. பொருட்களை இறக்கி, வாக்காளர்களை விலைக்கு வாங்கலாம் என்று நினைத்தால் கண்டிப்பாக அதனை மீறி மௌனப் புரட்சி மூலம் மக்கள்  எங்களை ஆதரிப்பார்கள்.  திமுக வேட்பாளர் தனசேகர் ஒரு ஒட்டுக்கு 500 என்று நான்கு பூத் சிலிப்புக்குள் வைத்துப் பணம் தருகிறார்.  சின்னம் போட்ட பூத் சிலிப்பை கட்சியினர் யாராவது தரலாமா?  தரக்கூடாது.

தேர்தல் ஆணையம் இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது. பூத் சிலிப்பை மாநகராட்சி அலுவலர்கள்தான் வழங்கவேண்டும். இதனை மீறி  சின்னம் பொறிக்கப்பட்ட வேட்பாளர் பூத் சிலிப் மூலம் பணத்தை அளித்துள்ளார்.  எந்த இடத்திலும் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கவேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது.

இந்த 9 மாதம் மக்கள் பட்ட துன்பங்கள் எல்லாம் எங்களுக்கு வாக்குகளாக மாறும்.
வேட்பாளர்களுக்கு மன ரீதியான அச்சுறுதல் தருகிறார்கள்.  இவை அனைத்தும் திமுகவின் நாடகம் என்பது  விரைவில் தெரியவரும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.