“ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர்கள் பா.ஜ.க, அ.தி.மு.க.வில்தான் இருக்கிறார்கள் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.இரகுபதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் போதைப் பொருள் நடமாட்டத்தை முழுமையாகத் தடுத்து வைத்திருக்கிறோம். கஞ்சா பயிர் ஒரு சென்ட் கூட நடப்படாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது உலகத்திற்கு தெரியும். அப்படிப்பட்ட இடத்தில் இருக்கும் நாங்கள் நிச்சயமாக போதைப் பொருள் நடமாட்டத்திற்கு உறுதுணையாக எந்த வகையிலும் இருக்க மாட்டோம்.
தமிழ்நாட்டை அவமதிக்கும் செயலாக, தமிழ்நாடு போதைப் பொருள் தலைநகரமாக மாறியிருக்கிறது எனக் கூறி தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் போன்ற வளர்ச்சியை எங்களுக்கு ஏன் ஏற்படுத்தவில்லை? என ஒன்றிய பா.ஜ.க.வை நோக்கி வட இந்திய மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். போதைப் பொருள் மாநிலம் போல தமிழ்நாட்டை சித்தரித்தால்தான், தமிழ்நாட்டின் வளர்ச்சி வட இந்தியாவில் பேசுபொருளாகாது என்பதற்காகவே பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜ.க.வில் இருக்கக்கூடிய பலர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், அவர்களெல்லாம் பாஜகவில் சேர்ந்தவுடன் புனிதர்களாக மாறிவிட்டார்கள்.
முன்னாலேயே நடந்த சம்பவத்தைத் தி.மு.க மீது பழிபோடலாம் என தப்புக் கணக்குப் போட்டார்கள். ஜாபர் சாதிக் கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டார், அவரோடு தொடர்புடையவர்கள் பா.ஜ.க, அ.தி.மு.க.வில்தான் இருக்கிறார்கள். ஜாபர் சாதிக்கை எங்கே பிடித்தார்கள் என NCB தெளிவாகக் கூறவில்லை. விசாரணை நடைபெறாமலேயே செய்தியாளர் சந்திப்பு நடத்தியது தவறு, கண்டிக்கத்தக்கது. குற்றவாளிக்குத் துணைபோக மாட்டோம், சட்டப்பூர்வமாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவோம். ஒன்றிய அரசு தகுந்த சாட்சியங்களோடு வழக்கு தொடர்ந்தால் மகிழ்ச்சி. அவர் ஒரு பைசா கூட கட்சிக்கு தரவில்லை.
தலைமைக்கழக சட்ட தலைமை ஆலோசகர் - பி.வில்சன் எம்.பி. செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்த விவரம் பின்வருமாறு…
தேவையில்லாமல் அடிப்படை ஆதாரம் இல்லாமல் கட்சியை விட்டு வெளியே அனுப்பியவர் குறித்துப் பேசுகிறார்கள். தகவல் வந்தவுடன் கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் மீது குற்றம்சாட்டப்பட்டது, அவர் மீது குற்றப்பத்திரிக்கை கொடுத்துள்ளார்கள். அவரைப் பதவியிலிருந்து எடுத்தார்களா? ஆளுநரும் அந்த வழக்கிற்கு அனுமதியே கொடுக்கவில்லை, உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற பிறகே விஜயபாஸ்கர் மீது மட்டுமல்லாமல் ரமணா மீதும் அனுமதி வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கழகத் தலைவர் அவர்களால் அந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. போதைப் பொருளை ஒழிப்பதற்குத் தி.மு.க.வைப் போன்று எந்த கட்சியும் நடவடிக்கை எடுத்தது கிடையாது.