வடக்கு காசாவில் உள்ள மக்கள் தெற்கு பகுதிக்கு உடனடியாக செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் 24 மணி நேர கெடு விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்த அறிவிப்பு சாத்தியமற்றது என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு ஏவுகணைகளைச் செலுத்தித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் பதிலடி கொடுக்க ஆரம்பித்ததும் போரின் போக்கு இஸ்ரேல் பக்கம் திரும்பியது. காசாவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்துவிட்டனர்.
இந்த நிலையில் அப்பாவி பொது மக்களை காசா அமைப்பு கேடயமாகப் பயன்படுத்தித் தாக்குதலிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதாகவும் இதை உணர்ந்து வடக்கு காசாவில் உள்ள மக்கள் 24 மணி நேரத்தில் தெற்கு காசாவுக்கு செல்ல வேண்டும். ஐ.நா அமைப்பும் தன்னுடைய பணியாளர்களை தெற்கு காசா பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
பொது மக்கள் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த அறிவிப்பை ஏற்று தெற்கு காசாவுக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. மேலும் தன்னுடைய படையை வடக்கு காசா எல்லையில் இஸ்ரேல் குவித்து வருகிறது. இஸ்ரேலின் இந்த அறிவிப்பை நம்ப வேண்டாம் என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையும் கண்டனம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் வடக்கில் இருந்து தெற்குக்கு லட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வு மேற்கொள்வது சாத்தியமில்லை. இஸ்ரேலின் இந்த அறிவிப்பு பேரழிவுகரமான விளைவு என்று அது விமர்சித்துள்ளது.
மக்கள் வெளியேறுவதில் போிடர் சூழல் ஏற்படுவதைத் தவிர்க்க இந்த இடமாற்ற உத்தரவைத் திரும்பப் பெறுமாறு ஐ.நா வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் தன்னுடைய பள்ளிகள், மருத்துவ சேவை முகாம்களை தெற்கு காசா பகுதிக்கு ஐ.நா மாற்றியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.