தமிழ்நாட்டில் மொத்தம் 36 வகையான பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் மொத்த மக்கள் தொகை 7.21சதவீதம் என்று 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது. இவர்களில் தோடா, கோடா, குறும்பர், இருளர், பணியன், காட்டு நாயக்கன் ஆகிய ஆறு சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது. இவர்கள் அழிந்துவரும் பழங்குடியினர் பட்டியலில் உள்ளதாக அரசு தெரிவிக்கிறது.
இந்த ஆறு பழங்குடிகளில் இருளர்கள் தென்னிந்தியாவில் தமிழகத்திலும் பரவி வாழும் மிக முக்கியமான பழங்குடியினர். இவர்களுக்கு இந்த பெயர் இருள் எனும் சொல்லில் இருந்து வந்ததாக கருதப்படுகிறது. அடர்ந்த இருட்டான காடுகளில் வாழ்ந்ததால் இவர்களுக்கு இந்த பெயர் வந்ததாக கருதப்படுகிறது. மேலும் இருளுக்கு இணையாக கறுத்த மேனி உள்ளதால் இவர்களை இருளர் என்று அழைப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இவர்களை காவல்காரன், காட்டுக்காரன், பாம்புக்கார்ன், வில்லி, வில்லியன், வேட்டைகாரன், வேடவர், வேடுவர் என பலபெயர்கள் இவர்களுக்கு உண்டு.
ஆதி தமிழர்கள்:
இந்த இருளர்கள் மனித குலத்தின் ஆதி இனமான நெக்ரிடோ (necrito) இனவகைளை சார்ந்தவர்கள் என்று மானிடவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருளர்களின் மூதாதையர்கள் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியாவிற்க்குள் நுழைந்த பழமையான கருப்பினத்தை சார்ந்தவர்கள். இவர்களே ஐந்திணைகளின் முதன்மையான குறிஞ்சித்தினையின் ஆதி தமிழ் குடிகள் என்று மானிடவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பின்னைய நாட்களில் மலையை விட்டு காடுகளும் சமவெளி பகுதிக்கும் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களின் மரபனுமாராத ஆதி மக்கள் இன்னும் அந்தமான் தீவுகளில் உள்ள காடுகளில் வசிக்கின்றனர் என்றும் மானிடவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அடிப்படையில் காடு மற்றும் மலை சார்ந்த நிலமே இவர்களின் வாழ்விடம். அதுமட்டுமல்லாது இவர்கள் சமவெளிப் பகுதிகளிலிலும் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர், எனவே இருளர்கள் காடு, மலை, சமவெளி என மூன்று தினைகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இதில் மலைவாழ் இருளர்கள் தமிழ்நாட்டின் நீலகிரி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். சமவெளி இருளர்கள் வட தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இன்றைய காலகட்டத்தில் தஞ்சை, கோவை, நீலகிரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , திருவண்ணாமலை, கடலூர், போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடச்சி மலையிலும் வாழ்ந்து வருகின்றனர். மலைவாழ் இருளர்களுக்கும் சமவெளி இருளர்களுக்கும் சமூக பண்பாடு ரீதியாக பாரிய வேறுபாடுகள் உள்ளன.
இருள மொழி:
இருளர்கள் தென்னிந்தியா முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பேசும் மொழி இருள மொழி எனப்படும். இந்த மொழிக்கு வரிவடிவம் கிடையாது. பேச்சு மொழியாகவே உள்ளது. இந்த மொழியை ஏரவல்லம், எருக்கா, இரவா, இருளிக்கா, கோரவா என்ற பெயர்களிலும் அழைப்பதுண்டு. இதில் மலைப்பகுதி இருளர்கள் பேசும் மொழி வேறாகவும் சமவெளி இருளர்கள் வேறுவிதமாகவும் இருக்கும். இந்த மொழி திராவிட மொழிக்குடும்பத்தின் தனித்த மொழி என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றர். சிலர் இது தமிழின் கிளை மொழி என்று குறிப்பிடுகின்றனர். இந்த மொழி கொஞ்சம் கொஞ்சமா அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று UNESCO தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.
பழங்குடியினர் என்றாலே வனப்பகுதியில் வாழ்பவர்கள் நாகரீகம் அடையாதவர்கள் என்ற பொதுபுத்தி எவ்வளவு பொய்யானது என்று இருளர்களின் பாண்பாட்டை புரிந்துகொண்டாலே போதும். இவர்கள் சமூக படிநிலையில் மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாளும் இவர்களின் பாண்பாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் மற்ற எல்லா பழங்குடி இனத்துடனும் ஒப்பிடும்போது இருளர்களின் பண்பாடு மிகவும் தனித்துவம் மிக்கது. மொழி, குடும்பம், திருமணம், இசை, நடணம், உணவு, வழிபாடு, சடங்கு, சமய நம்பிக்கை, வாழ்க்கை முறை போன்ற அனைத்து விடையத்திலும் ஒரு தனித்தும் அவர்களிடம் உண்டு. ஆனால் இன்றையா அரசியல் பொருளாதார சூழ்நிலையில் அவர்களின் வாழ்வு மிக மோசமாக சுரண்டப்பட்டு வருகிறது.
இவர்களின் பண்பாட்டில் மிக சிறப்பான ஒன்று மூலிகை மருத்துவத்துறை. காடுகளிலும் மலைகளிலும் கிடைக்கும் அறிய மருத்துவ குணம் நிறைந்த மூலிகையை பயன்படுத்தி பல தீராத நோய்களுக்கு மருந்து தயாரிப்பதும் அதன் பட்டறிவையும் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வந்தனர். குறிப்பாக பாம்பு போன்ற விச பிராணிகள் கடித்தால் அந்த விசத்தை முறியடிக்க பல்வேறு மூலிகை மருந்துகள் அவர்களுக்கு பரிச்சயம்.
இவர்களின் குல தெய்வம் கன்னியம்மன். எந்த காரியத்தை செய்யும் முன்பு கன்னியம்மனிடம் குறி கேட்பது வழக்கம், குலதெய்வத்தின் உத்தரவின் பேரில்தான் அனைத்தையும் செய்வார்கள். மேலும் பட்டம் கொடுத்த தெய்வம், காவல் தெய்வம், கஷ்ட தெய்வம், முருகன் போன்ற பல தெய்வங்களை வழிபடுவது வழக்கம். குறி சொல்லுவது இவர்களின் சிறப்பியல்புகளில் ஒன்று. மலைவாழ் இருளர்களில் சிலர் ரங்கசாமி என்ற பெயரில் விஷ்ணுவை வழிபடுவதாக கூறப்படுகிறது மேலும் அவர்கள் மாரியம்மனையும் வழிபடுகின்றனர். இவர்கள் இயற்கையின் மீது அதீத பக்திகொண்டவர்கள். அதேபோல் இறந்த முன்னோரை வழிபடும் நம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் திங்கள்கிழமையை தீப்பட்ட நாள் நெருப்பு நாள் என்று கூறுவார்கள். புதன் கிழமை புற்றில் இருந்து பாம்பு வெளியேவராது என்றும் நம்புகிறார்கள். மேலும் இவர்களிடம் மாரியம்மன் வழிபாடும், நடுகள் வழிபாடும் உள்ளது. நடுகள் வழிபாடு இவர்களிடம் இருந்துதான் மற்றவர்களுக்கு பரிவியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆண்டுதோறும் மாசிமாதம் முழு பவுர்ணமி நாளன்று மகாபலிபுரம் கடற்கரையில் குழுமி இரவு சமைத்து உண்டு ஆடி பாடி மகிழ்வது வழக்கம். பின் காலையில் கடலில் நீரடி அவர்களின் குழு தெய்வமான கண்ணியம்மனை வழிபடுவார்கள். இந்த திருவிழா அவர்களின் வாழ்வில் மிக முக்கியமானது. செங்கள் சூளையிலும் நெல்வயல்களிலும் பண்னை அடிமைகளாக வேலை செய்யும் இருளர்கள் இந்த திருவிழாவை கொண்டாடுவதற்காக காத்து கிடப்பார்கள். இது ஒரு சமூக கூட்டு இயக்கம். பழங்குடி மரபின் அழியாத எச்சம். ஆடி மற்றும் சித்திரை மாதங்களிலும் சில திருவிழாக்களை கொண்டாடுவது வழக்கம்.
கதைகள், நாட்டுப்புற பாடல்கள், விடுகதைகள், பழமொழி, இசைக்கருவி மீட்டுவது போன்ற பல்வேறு மரபுகளை கொண்டவர்கள்.
நாள் முழுவதும் கடினமாக உழைத்து இரவு உணவுக்கு பின் இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடி ஆடுவது வழக்கம். இதில் ஆண், பெண், பெரியர், முதியவர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் குழுவாக நடனமாடுவார்கள். வெளிமனிதரை காட்டிலும் இவர்களிடம் பாலின சமத்துவம் அதிகமாக உள்ளது. இசைக்கருவி இல்லாத இருளர்கள் இல்லை என்று கூறுவது வழக்கம். சின்சு ஆட்டம், கொம்பாட்டம், திபண்ட் ஆட்டம், புலியாட்டம், குச்சியாட்டம் போன்ற நடனங்களை ஆடி மகிழ்வார்கள்.
இருளர்களின் நாட்டுப்புற பாடல்கள் மிகவும் தனிச்சிறப்புடையது. பிறப்பு, இறப்பு, சோகம், காதல், திருவிழா போன்ற பல்வேறு காலகட்டத்திற்கும் ஏற்றாற்போல் பாடல்பாடுவது வழக்கம். இருளர்களை பொருத்தவரை பாடலும் விடுகதையும் பிரிக்கமுடியாத ஒன்றாகும். இவர்கள் பல வகையாக தோல்கருவிகளை வாசித்து வந்தனர். அதில் கடிமெ, பெரை, தம்பட்ட மிக முக்கியமானது மேலும் புகரி, நாகசுரம், குவாலு போன்ற துளைக் கருவிகளையும் வாசிப்பது வழக்கம்.
உணவு பழக்கம்:
காட்டில் வாழும் இருளர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை காடுகளில் இருந்து பெற்றுக்கொள்கின்றனர். இவர்கள் எருமை மற்றும் மாட்டு இறைச்சியை உன்பதுகிடையாது. மறியாடு, வயல் எலி, கோழி, மான், பன்றி, முயல், காட்டுக்கோழி, புறா, காடை போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்கின்றனர். இன்னும் சில பகுதிகளில் இருளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலிருக்கும் சிறிய இடத்தில் பயிர் செய்கின்றனர். ராகி, சோழம், கிழங்கு வகைகளையும் உண்கிறார்கள்.
பெண்களின் நிலை:
திருமணத்திற்கு ஆண்களை தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு. வரதட்சணை வாங்கும் பழக்கம் கிடையாது. திருமண விருப்பமுடையவர்கள் காடு பூசாலி அல்லது காடு பூசாரி என்று அழைக்கப்படும் பெரியவரிடம் கூறினால் அவர் அனைத்து சடங்குகளையும் செய்து திருமணம் செய்துவைப்பார். இவரை ஜட்டி என்றும் அழைப்பார்கள்.. பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படுகிறது. தேன் எடுப்பது, மூலிகை பறிப்பது, கிழங்கு அகழ்வது போன்ற வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர்.
வேட்டையாடுதல், தேன் சேகரித்தல், ஈசல் பிடித்தல், மூலிகை சேகரித்தல், பாம்பு பிடித்தல் போன்ற பல்வேறு மரபு தொழில்களை செய்துவந்தனர். இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இருளர்கள் செங்கல் சூலையில் கொத்தடிமையாக வேலை செய்கின்றனர். அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக இருக்கின்றர். மேலும் அருவடை காலங்களில் அருகில் இருக்கும் நில உடமையாளர்களிடம் பன்னை கூலிகளாகவும் வேலை செய்கின்றனர். அத்தோடு காவல்காரர்களாகவும் இருக்கின்றனர்.
காடு அவர்களது இதயம் மலை அவர்களது உடல்.
காட்டை இதயமாகவும் மலையை உடலாகவும் எண்ணி வாழ்ந்து வந்த இருளர்களை நவீன அரசுகள் நசுக்க துவங்கியது. கடந்த நூற்றாண்டுகளில் பெரும் பகுதி இவர்கள் மலைகளிலும் காடுகளிலும் தான் வாழ்ந்து வந்தனர். காலனிய ஆட்சி பல்வேறு அடக்குமுறை சட்டங்களினூடாக பழங்குடியினரை அவர்களின் இருப்பிடத்திலிருந்து துரத்திவிட்டு வனத்தில் இருக்கும் வளங்களைக் கொள்ளையடித்தனர். இதனூடாக பெரும்பான்மை பழங்குடிகள் இடம்பெயர தொடங்கினர் . மேலும் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1976 வனப்பாதுகாப்பு சட்டம் அவர்களை அடியோடு வனப்பகுதியை விட்டு துரத்தியடிக்க துவங்கியது, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது பண்பாடும் மற்றும் பொருளாதாரமும் சிதைந்தது. காடும் மலையும் அவர்களை ஒருபோதும் பட்டினிபோட்டதில்லை அதிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட பின் அவர்கள் பரிதாபகரமான மனிதர்களாக்கப்பட்டார்கள்.
குறிப்பாக சமவெளிப்பகுதிகளில் வாழத்துவங்கிய இருளர்களை குற்றப்பரம்பரையினராகச் சேர்க்கப்பட்டனர். அவர்கள் வசிப்பிடத்திலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் ஏதாவது திருட்டு நடந்தாலும் இவர்கள் மீது பொய் வழக்குப் போட்டுத் துன்புறுத்துவது வாடிக்கையான காவல் நடைமுறை. அதை எதிர்த்து நியாயம் கேட்க முயற்சிக்கும் அவர்கள் வீட்டு பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்வதும் ஒரு நடைமுறையாக இருந்துவருகிறது. ஏற்கனவே அவர்களின் வாழ்வு வறட்சி, கால்நடைகள் அழிவு, வறுமை, கலாச்சார அழிவு போன்ற பல இன்னல்களுக்கு உட்பட்டுள்ளது. அவர்கள் வருமை கோட்டிற்குக் கீழே தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் காவல்துறையின் பொய் வழக்குகள் அவர்களின் நிலையை மிக மோசமாக பாதிக்கிறது.
சாதிச் சான்றிதழ் பெறுதல் என்பது இருளர் மக்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. எஸ்டி பிரிவு சாதி சான்றிதல் கொடுக்கும் அதிகாரம் கோட்டாட்சியரிடம்தான் உள்ளது. படிப்பதற்கும் கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கும் சாதி சான்றிதழ் அவசியமாக உள்ளதால் குழந்தைகள் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கிறார்கள் ஆனால் கோட்டாட்சியர்கள் அதை சரிபார்த்து உரிய நேரத்தில் கொடுப்பது கிடையாது. இதனால் பல குழந்தைகளுக்கு கல்வி கேள்விக்குறியாக உள்ளது.
அடிப்படை வசதியற்ற வாழ்வு:
இவர்களுக்கு முறையான வாழ்விடம் கிடையாது. தங்கள் வசிக்கும் இடத்திற்குப் பட்டா கேட்டால் அரசு தர மறுக்கிறது. அரசு வீடுகட்ட நிதி ஒதுக்கியும் அவர்களுக்கு அது பெறத் தகுதியற்ற நிலையில் இருப்பதற்கு காரணம் அவர்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பட்டா கிடையாது. அவர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளுக்கு மின்சாரம் , குடிநீர், சாலை, போன்ற எந்த வித அடிப்படை வசதியும் கிடையாது. ஊர் பொதுவில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் எந்தவித உரிமையும் இல்லை. இவர்கள் தங்களுக்கு அரசின் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப் பல ஆண்டுகளாக அரசிடம் போராடி வருகின்றனர். மேலும் குடிநீர் எடுப்பதற்காக பல கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியுள்ளது. அதனால் சுத்தமான குடிநீர் என்பது அவர்களுக்குப் பெரிய கனவாக உள்ளது. அனைத்து வீடுகளுக்கும் முறையான மின்சார வசதி கிடையாது, ஒரு சில வீடுகளுக்கு மட்டுமே மின்சார வசதி கிடைத்துள்ளது. தெருவிளக்கு கிடையாது.
இருளர்கள் வசிக்கும் இடத்தில் ஆரம்பச் சுகாதார வசதி கிடையாது. எனவே நோய் பாதிக்கப்பட்டாலும் குழந்தைப்பேறு போன்ற மிக அவசரமான நேரத்தில் கூட பல மைல்கள் செல்ல வேண்டியுள்ளது. இப்படிச் செல்வதற்கு எந்தவித போக்குவரத்து வசதியும் இல்லதால் பல உயிர்கள் பறிக்கப்படுகிறது.
இன்றய சூழ்நிலையில் பல்வேறு கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் சாதி சான்றிதழ் பெறுவதற்கும் இருப்பிட சான்றில் பெறுவதற்குமே தினந்தோறும் போராட வேண்டிய நிலையில் இருளர்கள் இருப்பது பெரும் கொடுமையான விடையமாக இருக்கிறது. அரசு ஒவ்வொரு ஆண்டும் பழங்குடியினருக்கு என்று பல கோடி நிதி ஒதுக்கினாலும் அவர்களின் நிலை மேம்பட்டதாகத் தெரியவில்லை. பெரும்பாலான இருளர்களுக்குக் குடியிருக்க அந்த பணம் முறையாக கையாளப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ஏறத்தால 7.21 லட்சம் பழங்குடியினர் வாழ்வதாகத் தெரிவிக்கிறது. அவர்களில் கல்வியறிவு பெற்றவர்கள் 27.9%க்கும் குறைவானவர்கள் என்பது வருத்தமளிக்கிறது