இந்தியர்களாகிய நாம் என்றுமே மேற்கத்திய நாட்டு கலாச்சாரத்தின் பால் கவர்ந்த வண்ணமே உள்ளோம். நம் சந்தையை ஆக்கிரமித்துள்ள ஐரோப்பிய அமெரிக்க தினசரிகள் உடை முதல் உணவு வரை நின்று விடாமல் நம் கழிப்பறையிலும் நுழைந்திருக்கிறது. மனித இனம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டது. மனித நடைமுறைகள், ஆடை நாகரீகம், விவசாயம், போக்குவரத்து மற்றும் பல பரிணாமங்கள் வந்த போதும் காலை கடனை கழிக்கும் வழக்கம் இன்னும் மாறாமலே உள்ளது. சொல்லப்போனால் மனித இனம் உருவானது முதலே இந்த நிலையில் தான் நாம் கழிவை வெளியேற்றி வருகிறோம்.
ஆனால் இன்றைய நவீன உலகில் மேற்கத்திய அமரும் வகையிலான கழிப்பறைகள்(Western Toilets) நம் காலை வழக்கத்தை மாற்றியுள்ளன. அமர்ந்த வகையில் உடற்கழிவை வெளியேற்றுவது வசதிதானே என்று நீங்கள் எண்ணினால் அது முற்றிலும் தவறு. கீழே அமர்ந்து வெளியேற்றுவதே சரியான இயற்கை முறையாகும்.
தாயின் கருவில் இருக்கும் குழந்தை படத்தை பாருங்கள். குழந்தை அமைந்திருக்கும் விதமே விளக்கும் இந்திய கழிப்பறை வழக்கம் எந்த அளவிற்கு இயற்கையானது என்று. அதனை முழுமையாக உணர்ந்து கொண்ட மேற்கத்திய நாடுகள் 90 டிகிரி கோணத்தில் அமர்வது தவறானது 35 டிகிரி கோணத்தில் அமரும் இந்திய வழிமுறையே சிறந்தது என மக்களுக்கு அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இது மட்டுமல்லாது மேற்கத்திய கழிப்பறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளையும் இந்திய கழிப்பறையின் நன்மைகளையும் அறிவியல் ரீதியாக அலசுவோம் வாருங்கள்.
1. வாழ்நாள் நீடிக்கும்:
இந்திய கழிப்பறைகளில் நாம் அமரும் விதமே ஒரு வகையான உடற்பயிற்சி தான். கைகள் மற்றும் முக்கியமாக கால்களுக்கு சிறந்த பயிற்சியாக இது அமைகிறது. இரத்த சுழற்சியை சீராக வைக்கவும் இது பயன்படுவதாக நம்பப்படுகிறது. முறையாக தினசரி காலை கடன் செலுத்துவதை பின்பற்றுவது ஆரோக்கியத்தை நிச்சயம் அதிகரிக்கும். மேலும் பிரபல யோகாசனங்களில் ஒன்றான சாசங்காசனம் செய்வதை ஒத்ததாகவும் இது அமைகிறது (சாசங்காசனப் பயிற்சியால் முதுகெலும்பு நன்கு ஓய்வு பெறுவதுடன், பின்புற தசைகளை நீட்சியடைய செய்கிறது.)
2. செரிமானம் ஒழுங்குபெறும்:
இந்திய கழிப்பறைகளில் அமருவது உடல் மலத்தை வெளியேற்றி செரிமானம் சரியாக நிகழ முழு ஒத்துழைப்பையும் உடலுக்கு தருகிறது. நாம் கொடுக்கும் சிறிதளவு அழுத்தம் முழுமையாக உடலை சுத்தம் செய்கிறது.
ஆனால் வெறுமனே அமர்ந்திருக்கும் மேற்கத்திய கழிப்பறைகளில் முழுவதுமாக கழிவுகள் வெளியேறாமல் உடல் செரிமானத்தை பாதிக்கிறது. சரியான அழுத்தம் செலுத்தபடாமல் குடல் பகுதியில் தேவையில்லா சிரமம் ஏற்படுகிறது. மேற்கத்திய முறையில் திருப்தி பெற இயலாததால் மன உளைச்சல் போன்ற பாதிப்புகளும் சிலருக்கு உண்டாகின்றன.
3.கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது:
இந்திய கழிப்பறைகள் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது, ஏனெனில் அது மிகவும் இயற்கை சார்ந்த வழியாக இருப்பதால். கருப்பைக்கு அவசியமில்லாத அழுத்தத்தை தவிர்ப்பதுடன் இந்திய கழிப்பறையை பயன்படுத்துவது சுகப்பிரசவத்திற்கும் உதவுவதாக சொல்லப்படுகிறது.
4.சுற்றுச்சூழலுக்கு ஏற்றது:
இந்திய கழிப்பறைகளுக்கு எதிராக இதுவரை குற்றச்சாட்டுகள் எழுந்ததில்லை. ஆனால் மேற்கத்திய கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் காகிதங்களுக்காக(tissue paper) வருடந்தோறும் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன.
ஒப்பிட்டு பார்க்கும் போது மிக அதிகளவிலான தண்ணீரும் வீணாகிறது. நமக்கோ அன்று சொம்பு இன்று ஜக்கு என்ற அளவில் மிக குறைவாக தண்ணீரே பயன்படுகிறது. எனவே சுற்றுச்சூழல் பாதிப்படைவதை தேவையில்லா காகிதம் தண்ணீர் வீணாவதை குறைப்பதிலிருந்தே கணக்கிடலாம்.
5. கேன்சர் வராமல் காக்கிறது:
ஏற்கனவே காற்றையும் நீரையும் நம் அரசே விட்டுக்கொடுத்து பல்வேறு விதமான நோய்களுக்கு முதலீடு செய்து வைத்திருக்கிறது. உட்கார்ந்து மலம் கழிப்பது உடலிலுள்ள கழிவை மொத்தமாக வெளியேற்ற உதவுகிறது.
இதனால் மலச்சிக்கல்(constipation), குடல்வாலழற்சி(appendicitis) மற்றும் முக்கியமாக பெருங்குடல் கேன்சர்(colon cancer) போன்ற பிற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.
16 ஆம் நூற்றாண்டு காலத்தில் தான் மேற்கத்திய கழிப்பறைகள் அறிமுகப்படுத்தப் பட்டன. ஆனால் ஆரம்ப காலத்தில் செல்வாக்கு பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருந்தது. அதற்கு காரணம் கம்பீரமாக அரியணையில் அமர்வதை ஒத்திருப்பதாக அதை அவர்கள் உணர்ந்ததே.
அடுத்த சில நூற்றாண்டுகளில்(?) ஐரோப்பியா, அமெரிக்க கண்டங்களை கடந்து விட்ட இவை இந்தியா, சீனா, கொரியா போன்ற கிழக்கு நாடுகளை இன்னும் முழுவதுமாக ஆக்கிரமிக்கவில்லை.
அதிகரித்துவரும் செரிமான தொடர்பான நோய்களை கவனித்து வந்த மேற்கு உலகம் வயிறு குடல் தொடர்பான கோளாறுகள் மேற்கத்திய கழிப்பறைகளை பயன்படுத்தும் போது அதிகரித்த வீதமாக இருப்பதை ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்தனர். அறிவியலார்கள், மருத்துவர்கள் மேலும் ஆராய்ந்த சமயம் மேற்கத்திய அமரும் விதம் மனித உடற்கூறியல் எதிராக இருப்பதை உணர்ந்தனர்.
தற்போது இதை அறிந்த கொண்ட வியாபாரிகள் மேற்கத்திய கழிப்பறைகளை முழுவதுமாக மாற்ற முடியாது, ஆனால் அதற்கு மாற்றாக சிறிய நாற்காலி, டேபிள் போன்ற பல்வேறு உபகரணங்களை தொடர்ந்து அறிமுக படுத்திய வண்ணம் உள்ளது.