உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா. இந்தியாவின் இந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டி இன்று மும்பையில் நடந்தது. முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்த ஆடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 327 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால், 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இன்றைய போட்டியில் இந்தியாவின் விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் ஆகியோர் சதம் அடித்தனர். மிகவும் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி 57 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்தியாவின் இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைக் கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய அணிக்கு வாழ்த்துகள்! இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, குறிப்பிடத்தக்கப் பாணியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அருமையான பேட்டிங்கும், நல்ல பந்துவீச்சு. இறுதிப் போட்டிக்கு வாழ்த்துக்கள்!" என்று கூறியுள்ளார். மற்றொரு பதிவில் முகமது ஷமியை அவர் பாராட்டியுள்ளார். அவரது இந்த வெற்றி தலைமுறை தலைமுறையாகப் போற்றப்படும் என்று கூறியுள்ளார்.
நாளை நடைபெற உள்ள மற்றொரு அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும்!