சமீபத்தில், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியவர்களின் பட்டியலில் மத்திய அரசு சில மாற்றங்கள் செய்தது. அதன்படி, சென்ற நிதி ஆண்டில் மொத்த டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் ரூ.25,000-க்கு மேல் கொண்டிருப்பவர்கள் இனி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவரெனில் டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் ரூ.50,000 க்கு மேல் இருந்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
முன்னதாக, ஏதேனும் தொழில் மூலம் வருமானம் ஈட்டும் மூத்த குடிமக்கள் மட்டும் வருமான வரி தாக்கல் செய்தால் போதுமானது. ஆனால், இப்போது அந்த விதி மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரே ஆண்டுக்குள்ளாக வங்கியில் ரூ.50 லட்சம் மற்றும் அதற்கு மேல் பணம் போட்ட நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
வெளிநாட்டு சொத்துகளைக் கொண்டிருப்பவர்கள், வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டிருபவர்கள், ரூ.1 லட்சத்துக்கு மேல் மின் கட்டணம் கட்டியவர்கள், வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் செலவிட்டவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.