புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்காவின் அறைக்கு சீல் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் சந்திர பிரியங்கா. சமீபத்தில் தன்னுடைய அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை அளித்திருந்தார். சாதி அடிப்படையிலும் பெண் என்பதாலும் தான் பிரச்னைகளை சந்தித்ததாகக் கூறியிருந்தார்.
சந்திர பிரியங்கா ராஜினாமா செய்யவில்லை, அவரை பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரைத்திருந்தார் என்று புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சௌந்திரராஜன் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து சந்திர பிரியங்கா அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த சந்திர பிரியாங்காவின் அறையை காலி செய்யும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டனர். பெயர் பலகையை அகற்றிய அவர்கள், அறையில் உள்ள பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் திடீரென்று சந்திர பிரியங்காவின் அறையை காலி செய்யும் பணியில் இருந்து ஊழியர்கள் அகற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து அந்த அறையைப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். எதனால் பொருட்களை அகற்றாமல் அறைக்கு சீல் வைத்தனர் என்ற விவரம் வெளியாகவில்லை. ஆனால், அறைக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.