உணவின் தரத்தைச் சோதிப்பது அரசின் வேலை, இதற்காக FSSAI உள்ளது என்று உத்தரப்பிரதேசத்தில் ஹலால் தரச் சான்றுக்குத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
அசைவ உணவுகள் ஹலால் முறைப்படி தயாரிக்கப்படுவதாக அசைவ உணவகங்களில் சான்றிதழ்கள் மாட்டியிருப்பார்கள். ஹலால் என்பது இஸ்லாம் கூறிய வழிகாட்டுதல் அடிப்படையில் கால்நடைகளைக் கொன்று இறைச்சி தயாரிப்பதாகும். ஹலால் முறைக்கு பல இந்துத்துவா அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் உத்தரப்பிரதேசத்தில் ஹலால் சான்றிதழுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இது இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஹைதராபாத்தில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "உணவின் தரம் மற்றும் பரிசோதனையை செய்வது அரசாங்கத்தின் பணி. இதை அரசுதான் செய்ய வேண்டும். இதற்காக FSSAI (இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) எங்களிடம் உள்ளது. எனவே அரசாங்கம்தான் உணவின் தரம் மற்றும் மக்கள் பயன்படுத்த ஏற்றது என்பது பற்றி சான்றிதழ் அளிக்க முடியும். தனியார் அமைப்புகளுக்கு இது இப்படி உணவு பற்றி சான்றளிக்க எந்த உரிமையும் இல்லை" என்றார்.
கடந்த நவம்பர் 18ம் தேதி உத்தரப்பிரதேச அரசு ஹலால் சான்றிதழுக்குத் தடை விதித்திருந்தது. ஹலால் முறையில் உணவு தயாரிக்க, சேமித்து வைக்க, விநியோகிக்க, விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்ததால் உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள் உள்ளாகி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.