சென்னையில் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கூரியர் பார்சலில் வருவதை தடுப்பதற்காக, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில், சென்னையிலுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச கூரியர் நிறுனங்களின் நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றம் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், மருந்துகடைகளில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை சில இளைஞர்கள் போதைக்காக பயன்படுத்தி வருவதும், மற்ற இளைஞர்களுக்கு விற்பனை செய்வதையும் தடுக்க கடந்த 23.11.2021 அன்று சென்னையிலுள்ள மருந்துகடை உரிமையாளர்களுடன், காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி உரிய ஆவணங்களின்றி இது போன்ற மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என எடுத்துரைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில், கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களின் மூலம் சட்ட விரோதமாக போதை பொருட்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு, இன்று (03.12.2021) மாலை, காவல் ஆணையரகத்தில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் திரு.T.செந்தில்குமார், இ.கா.ப, (வடக்கு), மருத்துவர் N.கண்ணன், இ.கா.ப. (தெற்கு) ஆகியோர் தலைமையில் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் சென்னையிலுள்ள உள்ளூர், உள்நாட்டு மற்றும் சர்வதேச கூரியர் மற்றும் பார்சல் நிறுவன நிர்வாக அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூரியர் நிறுவனங்களில் பார்சல்கள் மூலம் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு, கீழ்கண்ட அறிவுரைகள், கட்டுப்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கூரியர் நிறுவனங்களில் பார்சல்கள் பதிவு செய்யப்படும்போது அனுப்புனர் மற்றும் பெறுநர் ஆகியோரின் முகவரி அடையாள ஆவணங்கள் சரி பார்த்த பின்னரே பார்சல்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
பார்சல்களில் அனுப்பப்படும் பொருட்களின் விவரம் மற்றும் அதற்கான ஆவணங்கள் சரி பார்த்த பின்னரே பதிவு செய்யப்பட வேண்டும்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் அனுப்பும்போது, அனுப்புனரின் புகைப்படத்துடன் கூடிய விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், இது போன்று குறித்துக் கொண்ட விவரங்களை தங்களது அலுவலகத்தில் பதிவேடுகள் மற்றும் இ-பதிவு (E-Registration) மூலம் பதிவு செய்து குறைந்த பட்சம் 3 வருடங்களுக்கான பதிவுகள் வைத்து கொண்டு, தேவைப்படும்போது காவல்துறையினர் கேட்கும் விவரங்கள் உடனடியாக கொடுக்க ஏதுவான வசதிகள் செய்து வைத்திருக்க வேண்டும்.
பதிவு செய்யப்படும் பார்சல்களின் அனுப்புனர் மற்றும் பெறுநர் முகவரிகளுக்கு அருகில் பெறப்படும் கொரியர் மைய அலுவலகங்களில் ஸ்கேன்னர் (Scanner) கருவிகள் கட்டாயம் வைத்திருந்து பார்சல்களில் போதை பொருட்கள் போன்ற சட்ட விரோத பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என சரிபார்க்க வேண்டும்.
அனைத்து கூரியர் நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் கிடங்குகளில் (Ware House) வெளியில் சாலையை நோக்கியும், உட்புறத்திலும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 30 நாட்கள் சிசிடிவி பதிவுகள் இருக்கும்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
பார்சல்கள் டெலிவரி செய்யும்போது, பெறுநர் பெயர் கொண்டவரே பொருளை பெறுகிறாரா என ஆவணங்களை சரி பார்த்து டெலிவரி செய்ய வேண்டும்.
கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களில் பெறப்படும் பார்சல்கள், சாலை, ரயில் மற்றும் விமானம் வழியாகவும் சென்று டெலிவரி செய்வதால், போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் அனுமதிக்காதவாறு மிகவும் விழிப்புடன் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.
பார்சல்களில் சந்தேகப்படும்படி பொருட்களோ அல்லது சட்ட விரோத பொருட்களோ கண்டறிந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
மேற்குறிப்பிட்ட காவல்துறையின் அறிவுரைகள் தங்களது ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி, இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூரியர் மற்றும் பார்சல் நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
காவல்துறையின் அறிவுரைகள் மீறி செயல்படுவதோ அல்லது போதை பொருட்கள் மற்றும் சட்ட விரோத பொருட்களை அனுப்புவதற்கு துணை புரியும் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்தாய்வில், இணை ஆணையாளர்கள் திரு.A.T.துரைக்குமார், இ.கா.ப, (வடக்கு மண்டலம்) திருமதி.S.ராஜேஸ்வரி, இ.கா.ப (மேற்கு மண்டலம்), திரு.S.பிரபாகரன், இ.கா.ப, (கிழக்கு மண்டலம்), துணை ஆணையர்கள், சென்னையிலுள்ள DHL, Intact Courier, Professional Courier, ST Courier, Postaplus, DTDC, FedEX உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச கூரியர் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், இக்கலந்தாய்வில் கலந்து கொண்ட கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள், காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து, காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என உறுதி அளித்தனர்.
#chennaipolice
#greaterchennaipolice
#chennaicitypolice
#shankarjiwalips