பாஜக கூட்டணியிலிருந்து விலகிய அ.தி.மு.க, இனி மீண்டும் வராதீர்கள் என்று கடுமையான பதிவை வெளியிட்டுள்ளது.
அ.தி.மு.க கூட்டணி வேண்டாம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூறி வந்தார். அதிமுக-வுடன் கூட்டணி அமைப்பதாக இருந்தால் தலைவர் பதவியை விட்டு விலகி, சாதாரண தொண்டராக தொடர்கிறேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அப்போது அது நகைச்சுவையாக பார்க்கப்பட்டது.
இருப்பினும் அதிமுக-வை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற்றும் வேலையை அமைதியாக அண்ணாமலை செய்து வந்தார். முதலில் ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்றார். பிறகு அண்ணாவை விமர்சித்தார். ரெய்டு நடக்கும் என்று பகிரங்கமாக எச்சரிக்கைவிடுத்தார். இவை எல்லாம் அதிமுக தொண்டர்களை கொந்தளிக்கச் செய்தது.
இந்த சூழலில் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று கூறி அதிமுக நிர்வாகிகள் டெல்லி பாஜக மேலிடத்தைத் தொடர்புகொண்டனர். அவர்களை சந்திக்காமல் திருப்பி அனுப்பியது டெல்லி பாஜக. இதனால் கடைசியில் கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மூலமாக காய் நகர்த்தியது. அதற்கும் டெல்லி பாஜக தலைமை மசியவில்லை. இந்த சூழலில் இன்று கூடிய அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழலில் அதிமுக-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நன்றி மீண்டும் வராதீர்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், "மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu
அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. #நன்றி_மீண்டும்வராதீர்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.