சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (38). இவர் 188-வது வட்ட திமுக செயலாளர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சமினா. 188-வது வார்டு திமுக வேட்பாளராக சமினா போட்டியிடுவதற்கு தேர்வாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இரவு செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்கு சேகரித்தார். மேலும் வாக்கு சேகரிப்பதற்காக கிறிஸ்தவ பாதிரியார் டேனியல் என்பவரை பார்ப்பதற்காக மடிப்பாக்கம் சதாசிவம் நகர்- ராஜாஜி நகர் பிரதான சாலை வழியாக சென்றார்.
அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் பைக்கில் செல்வத்தை வழிமறித்து தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள் செல்வத்தை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வம் இறந்து போனார். தகவல் அறிந்து மடிப்பாக்கம் போலீசார் வந்து செல்வம் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மடிப்பாக்கம் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் கொலையா? தொழில் போட்டியால் கொலையா? காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் திமுக வட்ட செயலாளர் கொலை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.