சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், தன்னை ஏன் பாஜக கைது செய்தது என்பதை ஆம் ஆத்மி தொண்டர்களிடையே விளக்கினார்.
மேலும், வரும் காலத்தில் யாரையெல்லாம் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்தும் அவர் பேசினார்.
மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்த கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இன்று அவர் ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
கெஜ்ரிவால் பேச்சு: அப்போது பேசிய அவர், "நான் சிறையில் இருந்து நேராக உங்களைப் பார்க்க வருகிறேன். 50 நாட்களுக்குப் பிறகு உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. இப்போதுதான் என் மனைவி மற்றும் புதல்வன் பகவந்த் மான் ஆகியோருடன் அனுமன் கோவிலுக்குச் சென்றேன். அனுமனின் ஆசீர்வாதம் எங்கள் கட்சிக்கு உள்ளது. அனுமன் அருளால்தான் நான் இன்று உங்கள் மத்தியில் இருக்கிறேன்.
எங்கள் ஆம் ஆத்மி கட்சி ஒரு சிறிய கட்சி, நாங்கள் இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறோம். ஆனால், பிரதமர் எங்கள் கட்சியை நசுக்குவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார். ஒரே நேரத்தில் நான்கு ஆம் ஆத்மி தலைவர்களைக் கைது செய்து சிறைக்கு அனுப்பினார். கட்சியின் நான்கு முக்கிய தலைவர்கள் சிறைக்கு அனுப்பினால் கட்சியே முடிந்துவிடும் என்று பிரதமர் நினைக்கிறார்.. ஆனால், ஆம் ஆத்மி அப்படிப்பட்ட கட்சி இல்லை.. ஆம் ஆத்மி கட்சிதான் நாட்டிற்கு எதிர்காலத்தைத் தரும் என்பதைப் பிரதமர் மோடியே உணர்ந்து கொண்டு உள்ளார் என்பதையே இது காட்டுகிறது.
ஆம் ஆத்மி: கடந்த 75 ஆண்டுகளில் வேறு எந்தக் கட்சியையும் இந்தளவுக்குத் துன்புறுத்தி இருக்க மாட்டார்கள்.. ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகப் பிரதமர் கூறுகிறார்.. ஆனால் நாட்டில் உள்ள திருடர்கள் எல்லாம் பாஜகவில் தான் உள்ளனர். 10 நாட்களுக்கு முன்பு ஒருவரை ஊழல்வாதி, மோசடிக்காரர் என்கிறார்கள். ஆனால், அந்த நபர் பாஜகவில் இணைந்தால் உடன் அவரை துணை முதல்வராக்கி, அமைச்சர் பதவியும் தருகிறார்கள்.
ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டுமானால் இந்த கெஜ்ரிவாலிடம் பிரதமர் மோடி கற்றுக் கொள்ள வேண்டும்.. டெல்லியில் எங்கள் ஆட்சி அமைத்ததும், எனது அமைச்சர் மீது ஊழல் புகார் எழுந்தது. அப்போது நானே அவரை பதவி நீக்கம் செய்து சிறைக்கு அனுப்பினேன். இதேபோலத் தான் பஞ்சாபில் ஊழல் புகாரில் சிக்கிய ஒரு அமைச்சரைச் சிறைக்கு அனுப்பினோம்.
கைதுக்கு என்ன காரணம்: திருடர்களையெல்லாம் உங்கள் கட்சியில் வைத்துக் கொண்டு நீங்கள் கெஜ்ரிவாலைச் சிறைக்கு அனுப்புகிறீர்கள்.. இது ஊழலுக்கு எதிரான போராட்டம் இல்லை... கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் யாரை வேண்டுமானாலும் எங்களால் கைது செய்ய முடியும் என்பதைக் காட்டவே இதைச் செய்துள்ளீர்கள்.. இந்த மிஷனுக்கு பெயர் ஒரே நாடு ஒரே தலைவர்.
ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களைச் சிறைக்கு அனுப்புவார்கள்.. இது தான் அவர்கள் திட்டம்.. ஏற்கனவே நமது அமைச்சர்கள், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜியின் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர்... மோடி மீண்டும் வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ். , பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே என அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள்...
அவர்கள் தலைவர்களையே கூட கட்டாயப்படுத்தி அரசியலில் இருந்து விலக வைக்கிறார்கள்.. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவராஜ் சிங் சௌஹான், வசுந்தரா ராஜே, கட்டார், ராமன் சிங் ஆகியோரின் அரசியல் முடிந்துவிட்டது.. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த 2 மாதங்களில் உத்தரபிரதேச முதல்வரையும் அவர்கள் மாற்றி விடுவார்கள்" என்று அவர் பேசினார்.