ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான் என்கிறார்.
1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்:
ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் மரணம் நெருங்குகிறது என்று உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கிறார்கள். அது இனிமையாக இல்லாத ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது இன்னமும் நமக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.
2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம்:
கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்கள் உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த அறையில் மருத்துவர்களும், நர்சுகளும் பேசிக்கொண்டதை அவர்களால் கேட்க முடிந்ததெனக் கூறினார்கள். மருத்துவர்களும், மற்றவர்களும் என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள் என்பதை அப்படியே அவர்கள் சொன்னார்கள்.
3) அமைதியும் வலியின்மையும்:
மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் அந்த வலி மறைந்து விடுகிறது என்றும் பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
4) சுரங்கவழிப் பாதை அனுபவம்:
பலரும் கும்மிருட்டிற்கு ஒரு சுரங்கவழிப் பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்கள். இது ப்ளேடோவின் சிப்பாய் கண்ட அனுபவமாகவும் இருக்கிறது.
5) பூமியைப் பார்த்தல்:
சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது கார்ல் ஜங் அனுபவத்தோடு ஒத்துப் போகிறது.
6) ஒளி மனிதர்களைக் காணுதல்:
சுரங்கவழிப்பாதையின் இறுதியிலோ, பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியிலோ அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்கிறர்கள். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களோ, நெருங்கிய உறவினர்களோ அங்கிருப்பதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.
7) அருட்பெரும் ஜோதியைக் காணுதல்:
ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியைப் பலரும் சொன்னார்கள். ஆனாலும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லை என்றும் கூறினார்கள். (புறக்கண்ணால் பார்க்கும் போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்)
அந்த தெய்வீகப் பிறவியை மதத்தினர் அவரவர் மதக்கடவுளாகக் கண்டார்கள். சிலர் யேசுகிறிஸ்து என்றும், தேவதை என்றும், பொதுவாக கடவுள் என்றும் சொன்னார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஒளிபடைத்த அபூர்வ சக்தி படைத்த ஒருவரைப் பார்த்ததாகவே கூறினார்கள்.
மேலும் நன்றாக விசாரித்ததில் அந்த பேரொளி விஷயத்தில் அனைவருமே ஒத்துப் போனார்கள். அந்தப் பேரொளியை அவர்களாக அவரவர் கடவுளாக எண்ணிக் கொண்டனர் என்ற முடிவுக்கு ரேமண்ட் மூடி வந்தார். ஆனால் பேரொளி மாத்திரமா என்று கடவுள் நம்பிக்கையோ, மத ஈடுபாடோ இல்லாதவர்களிடம் கூடக் கேட்ட போது அவர்களும் வெறும் பேரொளி மட்டும் அல்ல என்றும் அதற்கு மீறிய தங்களிடம் பேசவல்ல ஒரு சக்தியாக அது இருந்தது என்றும் தெரிவித்தார்கள்.
8) வாழ்ந்த வாழ்க்கையை பரிசீலித்தல்:
அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு காட்சி போல், திரையில் காண்பது போல் தத்ரூபமாகக் கண்டதாகவும் சொன்னார்கள். கிட்டத்தட்ட கிருத்துவர்களின் இறுதி நாள் மற்றும் சித்திரகுப்தன் பாவ புண்ணிய கணக்குகள் பார்பதற்க்கு ஒத்து போகிறது.
9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவிக்கப்படல்:
அந்த தெய்வீகப்பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் தெரிவித்தார்கள். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என்று தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாகச் சிலரும் சொன்னார்கள்.
இந்த கருத்துப் பரிமாற்றங்கள் யாவும் அவரவர் தாய்மொழியில் பேசப்பட்டதாக அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஆனாலும் கருத்து பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளும் அவர்களுக்கு அதை எப்படி என்று விவரிக்கத் தெரியவில்லை.
1975க்கு பின் பல நாடுகளிலும் இந்த மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற ஆரம்பித்தன. அதில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னிடம் வகுத்தன. டாக்டர் கென்னத் ரிங் (Dr. Kenneth Ring) என்பவரும் இந்த ஆராய்ச்சிகளை பல வருடங்கள் செய்து 1993 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சி முடிவுகளை விரிவாக வெளியிட்டார். அவருடைய ஆராய்ச்சிகளில் சிலர் அருகில் நடந்த சம்பவங்கள் மட்டுமன்றி மிகத் தொலைவில் நடந்த அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் பார்த்தார்கள், கேட்டார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். இது மனிதர்களுடைய அறிந்துணரும் திறன் அவர்கள் உடல்களுக்கு அப்பாற்பட்டதற்கான அசைக்க முடியாத ஆதாரம் என்று அவர் கூறுகிறார்.
டாக்டர் கென்னத் ரிங், ஷரான் கூப்பர் (Sharon Cooper) என்பவரோடு சேர்ந்து இரண்டாண்டு காலம் குருடர்கள் பெற்ற மரண விளிம்பு ஆராய்ச்சிகளை ஆராய்ந்திருக்கிறார். அதில் சில பிறவிக் குருடர்கள் கூட தங்கள் உடல்லை விட்டுப் பிரிந்த பின் எல்லாவற்றையும் தெளிவாகக் கண்டதை விவரித்ததாகச் சொல்கிறார். இது போன்ற ஆராய்ச்சிகளை பிற்காலத்தில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் (Dr. Bruce Greyson), டாக்டர் பிம் வான் லோம்மெல் (Dr. Pim van Lommel), டாக்டர் மைக்கேல் சாபொம் (Dr. Michael Sabom) போன்றவர்களும் செய்து டாக்டர் ரேமண்ட் மூடியின் ஆராய்ச்சி முடிவுகளை உறுதி செய்தனர்.
அவர்களில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் இன்னும் ஒருபடி மேலே போய் மரண விளிம்பு அனுபவத்தின் போது மயக்க மருந்தின் தாக்கத்தில் சம்பந்தப்பட்ட மனிதர் இருந்தாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். ஒருவேளை சிகிச்சையின் போது தரப்பட்ட மயக்கமருந்தின் தாக்கத்தால் கற்பனைக் காட்சியைக் காண்கிற நிலை இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணினார். ஆனால் மயக்க மருந்து ஆதிக்கத்தில் இல்லாத நபர்கள், மயக்க மருந்து ஆதிக்கத்தில் இருந்தவர்களை விட அதிகத் தெளிவுடன் அந்த நிகழ்ச்சிகளை விவரிக்க முடிந்ததைத் தன்னால் அறிய முடிந்தது என்றும் கூறினார்.