Breaking News :

Sunday, July 20
.

இந்தியாவின் பாரம்பரிய நடனக் கலைகள்?


தாளத்திற்கும் இசைக்கும் ஏற்ப உடலையும் கை கால்களையும் காண்பவர் கண்டு மகிழுமாறு அழகு நேர்த்தியுடன் அசைக்கும் கலை வடிவமே நடனம். இந்தியாவின் பல வருட பாரம்பரிய கொண்ட கலை நடனம் என்றே சொல்லலாம். அன்றைய காலந்தொட்டே நடனம் அரண்மனைகளிலும் கோவில்களிலும் சிறப்பு விழாக்களிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது இன்னும் சிறப்புக்குரிய ஒன்றே. நடனங்கள் சமூக விழிப்புணர்வு நோக்கத்துடனும் நம் பாரம்பரிய வளர்ச்சிக்கும் முக்கிய அம்சமாகவே உள்ளது.

மனிதர்கள் தமது எண்ணங்களை பிறருடன் பகிர்ந்துக் கொள்ள ஒரு தொடர்புமுறையாக உள்ளது நடனம். நம் உடலில் ஒளிந்திருக்கும் ஆன்மாவின் மொழியே நடனம் என்றே கூறலாம். நமது கொண்டாட்டாத்தின் வெளிப்பாடகவும் சோகத்தின் அனலாகவும் வெளிப்படும் உணர்ச்சியின் வெளிபாடே நடனம். நமது சோகமும் மகிழ்ச்சியாக மாறும் மந்திரம் நடனத்திற்கு மட்டுமே சாத்தியம். உலகம் முழுவதிலும் எண்ணற்ற நடனங்கள் உள்ளது. அந்தந்த நாடுகளுக்கான கலாச்சார மற்றும் பாரம்பரிய நடனங்கள் ஒவ்வொன்றும் தனி சிறப்பு பெற்றவை. அப்படிப்பட்ட நடனத்தின் சிறப்பம்சம் பற்றிய பகிர்வே இது.

நமது நாட்டின் பாரம்பரிய நடனம் என்றால் நிச்சயம் நம் நினைவை ஆட்கொள்வது பரதமே. பரதக் கலை என்றாலே சிவப்பெருமானின் ருத்ர தாண்டவம் தான் நம் அடுத்த நினைவலையாக இருக்கும். இன்றும் பரதம் ஆட தொடங்கியவுடன் நடராஜரை வணங்கிய உடன் தான் பரத நாட்டிய அரகேற்றம் நிகழ்கிறது. தென்னிந்திய பாரம்பரிய நடனமான பரதம் இன்று இலங்கையிலும் மிகவும் பிரசித்தி பெற்ற நடனமாகவே பார்க்கப்படுகிறது. பரதம் என்றால் பாவம் இராகம் தாளம் குறித்து நிற்பதாக சொல்லப்படுகிறது. நாட்டிய கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிகொணருதலையே பரதம் என்கிறோம்.

பேசும் விழிகள் சைகை மொழிகள் பரத நாட்டியம். வேற்று மொழியை விட தமிழ் மொழி இனிமை பரத நாட்டியம்... கண்டு ரசித்தால் கவலைகள் போகும் பரத நாட்டியம்... வரிகளுக்கு ஏற்றப்படி வஞ்சியின் நளினம் பரத நாட்டியம்... கைகளும் பேசும் கால்களும் பேசும் பரத நாட்டியம்.. குத்துப் பாட்டும் உண்டு குறத்தி நடனம் பரத நாட்டியம்.

பரத நாட்டியம் கண்டால் நம் சோகம் கூட இருந்த இடம் தெரியாமல் மறையும். நம் மனதும் உடலும் புத்துணர்வு பெறும். புதுமை பலவற்றை நாட்டியத்தின் மூலமே காண இயலும். பக்தி பரசவத்தில் தன்னை மறந்து கண்ணீர் ததும்ப ஆட ஒரு ஆண்மகனோ பெண்மகளோ வீரம் வெளிப்பட குதித்து ஆட பெண் தன் நாணத்தில் வெட்கி கனவு கண்டு காதலை வெளிப்படுத்த என அனைத்து உணர்ச்சிகளையும் ஒருங்கே வெளிகொணர பரதம் மறுக்க முடியாத நம் பாரம்பரிய நடனமே. நிச்சயம் இப்படிப்பட்ட பரதத்தைக் கண்டால் தன்னையும் மறந்து ஆனந்தத்தில் திளைப்பவர் அனைவருமே.

கதையை மையமாகக் கொண்டு ஆடும் கதக்களி கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடனம். இதனை ஆட்டக்கதை என்றும் கூறுவர். தேவதைகளை வழிபடும் ஆட்டங்களில் இருந்து தோன்றிய ஆட்டமாகவே கருதப்படுகிறது. பகவதி பாட்டு, காளியாட்டம், முடியேட்டு போன்ற ஆடல் வகைகளை உள்ளடக்கியது கதக்களி. ஆரியர்கள் வருவதற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையோடு ஒன்றித் தோன்றியததாக கூறப்படுகிறது.

கதக்களி ஒரு பேச்சு இல்லாத அபிநயம் வினோதமான வேசங்கள் சண்டைக் காட்சிகள் சமயத் தொடர்புகள் என்று சம்பிராதய பழங்காலத்திலிருந்தே நிலைத்திருக்கின்றன. கதக்களியில் முக பாவமும் கை அசைவுகளுமே முக்கிய அம்சமாக உள்ளது. இதன் ஒப்பனையும் உடை அலங்காரமும் ஒரு தனித்துவமான நடன வடிவமாகவே உள்ளது. மகாபாரதம் மற்றும் இராமாயணம் இதன் கருக் கதையாகவே உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பண்டைய நடன நாடக வடிவமே குச்சிப்புடி. நமது தென்னிந்தியா முழுவதும் பெயர் பெற்ற நடன வகையான குச்சிப்புடி ஆந்திரா மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குச்சிப்புடி என்னும் கிராமத்தின் பெயரால் அனைவராலும் அழைக்கப்படுகிறது. கருநாடக இசையோடு இணைந்து ஆடப்படும் நடனம் இது. இந்த நடனம் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தான் புகழ் பெறத் தொடங்கியது. குச்சிப்புடி நடனம் மக்களுக்கும் அரசுக்கும் ஒரு செய்தியை தரும் ஊடகமாகவே உள்ளது. நரச நாயக்கர் மன்னன் ஆட்சிக் காலத்தில் ஒரு முறை மக்கள் வரிச்சுமையினால் கடுமையாக அவதிப்படும் நிலை உண்டானது.

அப்போது அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் தங்களது நடனம் மூலம் மக்கள் படும் அவதியை மன்னருக்கு தெரியப்படுத்தி உள்ளனர். பின் மன்னன் மக்கள் நிலை உணர்ந்து அவர்கள் துயர் தீர்த்தார் என்று சொல்லப்படுகிறது. குச்சிப்புடியின் அங்கம் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம். நிருத்தம் என்றால் ஜதிகளையும் தீர்மானங்களையும் கொண்ட ஒன்று நிருத்தம் என்றால் பாடல் மற்றும் இசை நடனம் என்றால் முக பாவனைகள் கை முத்திரைகள் அடங்கியது. இந்த நடனத்தின் ஒரு பகுதி வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பில் நின்றுக் கொண்டு ஆடுவது இதற்கு தரங்கம் என்று பெயர். சில முறை தண்ணீர் பானையுடனும் ஆடுவதுண்டு.

ஒரிசா மாநிலத்தில் ஆடப்படும் பாரம்பரிய நடனம் ஒடிசி. வட இந்திய கல்வெட்டுகள் மற்றும் சிற்ப சான்றுகளின் படி இந்த ஒடிசி நடனம் பல நூற்றாண்டுகளாகவே ஆடப்படுகிறது என்று புலனாகிறது. கோயில்களில் மதிக்கப்பட்டு வந்த பாரம்பரிய நடனக்கலை இந்த ஒடிசி. கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கோட்டிப்புகழ் எனப்படும் சிறுவர்கள் இந்த நடனத்தைப் பெண்ணுடை தரித்து கோயில்களில் ஆடியுள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்த நடனம் ஆடப்பட்டது என்பதற்கு மிக சிறந்த உதாரணம் ராணி கும்பா குகைகளில் காணப்படும் ஒடிசி நடனங்களின் சிற்பங்கள்.

பரதத்திற்கும் முந்தைய நடனம் ஒடிசி என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். கருநாடக இசை ஹிந்துஸ்தானிஇசை மற்றும் ஒரிசா மாநிலத்தின் பழங்குடியினரின் இசை மூன்றுமே இந்த நடனத்திற்கு இசைக்கப்படும் இசையாகவே உள்ளது. இந்த இசை என்றுமே ஜகன்னாதருக்கு செய்யும் இறை வணக்கமான மங்கள சரண் என்ற நடனத்துடனே தொடங்கும். அதன் பின் தனக்கு கற்றுக் கொடுத்த குருவிற்கு மரியாதை செய்யும் விதமாக குருவணக்கம் நிகழும். இந்த நடனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய அம்சமாக விளங்கியவர் குரு கேலு சரண் மகாபாத்ரா. உலக அளவில் இந்த நடனம் இன்று பேசப்பட இவரும் இவர் சிஷியர் சஞ்சுக்தா பணிகிரஹியும் முழுமுதற் காரணம்.

மணிப்பூர் பிரதேசத்தின் பாரம்பரிய நடனம் மணிப்பூரி. மிகப் பழமையான மக்களை மகிழ்விக்கும் ஆடல் இது. கிருஷ்ணராதா கோபிகையரால் நிகழ்த்தப்பட்டதென்று கருதி வரும் ஆடல் ராஸ்லீலா. இந்த கலையை ஆடுபவர்கள் சலங்கை அணியமாட்டார்கள். ராஸ்லீலா நடனம் மணிப்பூரி நடனத்தின் பட்டியலில் அடங்கும். ராஸ்லீலா நடனத்தில் வசந்தராஸ், குஞ்ஜ ராஸ், மஹாராஸ் மற்றும் நித்தியாராஸ் ஆகிய நடனம் இதன் வகைகள் ஆகும்.

நடனத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே அதிகரிக்க செய்வதும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவதும் நமது கிராமிய நடனக்கலைகளை வளர்க்க நம்மால் இயன்ற செயல்களை செய்வோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.