முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு மாநாடு நடைபெறவுள்ளது. தமிழக அரசு கடந்த 10 மாதங்களில் மொத்தமாக 1,704 அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவற்றில் 80 சதவீத அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
மீதமுள்ள அறிவிப்புகள் மற்றும் செயல்பாட்டு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும், அதனை விரைவுபடுத்தும் வகையிலும் ஆட்சியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துக்கொள்ளும் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மாவட்ட நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவரும் நேர்மையாக, வெளிப்படை தன்மையோடு முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மக்களுக்கு பயனளிக்கும் முன்னெடுப்புகளை விளக்கமாக தெரிவித்தால் அரசு அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும். சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் இணைந்து கண்காணிக்க வேண்டும். மக்களை பாதிக்கும் செயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்க போலீஸ் பாரபட்சம் காண்பிக்கக் கூடாது என கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர், மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்கள் தொகுதியில் முதல்வர் துறையில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று முதல்வர் குறிப்பிட்டார். காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும். பிற்பகல் 4 முதல் மாலை 6.30 மணி வரை காவல் அதிகாரிகளுக்கான கூட்டமும், விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.